தமிழரின் விழாக்களும், விளையாட்டுக்களும்

தமிழர்களாகிய நாம் இன்றைக்கு பல்வேறு விழாக்களை கொண்டாடுகிறோம். இதே போல முற்காலத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட விழாக்கள் என்னென்ன என்பதை அறிவதற்கு சங்கப்பாடல்கள் தான் நமக்கு பெரிதும் துணை புரிகின்றன.
அவற்றின் மூலம் தமிழர்கள் கொண்டாடிய விழாக்களை ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் நம்மில் பெரும்பாலானோர்க்கு இந்திராவிழாவைப் பற்றித் தெரியும்.

பாண்டிய மன்னன் குடுமிப் பெருவழுதி என்பவன் கடல் தெய்வத்துக்கு முந்நீர் விழா என்ற விழாவை நடத்தியிருப்பது “”குடுமிதங்ககோ முந்நீர் விழவின் நெடியோன்… நன்னீர்ப் பஃறுளி” என்ற பாடல் வரி மூலம் தெரிகிறது.

திருமணங்களை அந்நாளில் “வதுவைவிழா’ என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். மாங்குடி கிழார் பாடல் மூலம் அவ்விழாவில் புதியராய் வந்தோர் சிறப்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதுதவிர சிறுசோற்றுவிழா, பெருஞ்சோற்றுவிழா, வில்விழா போன்ற பல்வேறு விழாக்களும் அக்காலத்தே நடைபெற்றுள்ளன.

அது மட்டுமா? ஆறுகளில் புது வெள்ளம் வரும் போது புதுநீர் விழா, தை மாதத்தில் தைந்நீர் விழா மற்றும் உள்ளி விழா, சித்திரை மாத இந்திர விழா முதலிய விழாக்களையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
விழாக்காலங்களில் பல்வேறு விளையாட்டுக்களிலும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிஞ்சி நிலச் சிறுவர்கள் புற்களால் வில், அம்பு செய்து ஆடும் விளையாட்டு, முல்லை, மருத நிலத்து சிறுவர்களின் குளித்துமணல் கொண்டு விளையாடும் விளையாட்டு, நீர்நிலைகளில் இளம் பெண்கள் ஓரையாடுதல், வீடுகளில் அம்மானை பந்தாட்டம், நெய்தல் நிலச் சிறார்களின் கடலாட்டம், பெண்கள் கடற்கரைகளில் மேயும் சிறு நண்டுகளை பிடித்தாடுதல் போன்ற விளையாட்டுக்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன.

பாலை நிலத்து சிறுவர்களோ வட்டாடுதலிலும் முல்லை நிலத்து மக்கள் ஏறு தழுவுதல் மற்றும் யானை, ஆடு, கோழி போன்றவற்றை மோதவிட்டு வெற்றி கண்டு இன்புற்றுள்ளனர் என்பதும் அப்பாடல்களில் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைக்கு இந்த விழாக்களும், விளையாட்டுக்களும் வடிவம் மாறியும் முறைகள் மாறியும் புழக்கத்தில் இருக்கலாம். சில மறைந்தும் இருக்கலாம்.  ஆனால் ஏறு தழுவுதல் போன்றவை இன்றும் தமிழர்களிடையே நீண்ட கால தொடர்ச்சியாகநடைமுறையில் இருக்கிறது. காலங்காலமாக இந்த விழா தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 மறுவினைகள் to “தமிழரின் விழாக்களும், விளையாட்டுக்களும்”



  1. பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக