ஜனவரி, 2010 க்கான தொகுப்பு

வியக்க வைக்கும் பழம்பாடல்கள்

“செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்’

உலகம்  எப்படி தோன்றியது என்பதை சங்கப் பாடலின் இந்த இரண்டே வரிகள் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

14ம் நூற்றாண்டில் தான் வானவியல் விஞ்ஞானி கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதை ஆய்வு பூர்வமாக எடுத்துரைத்தார். நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.

அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின பரிணாம தோற்ற வரலாறு கூறுகிறது.  இந்த உண்மைகள்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இதன் மூலம் பன்னெடுங்காலத்துக்கு முன்பே ஆழமான அறிவியல் ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் உலகம் கருதுகிறது.

உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்ற ஐம்பூத தோற்ற வரலாற்றை

“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்

என்றாங்கு ஐம்பூதத்தியற்கை’ என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் விளக்குவது மிகுந்த வியப்பளிப்பதாக  உள்ளது.

பிறர் நலம் நாடிய உயர்ந்த உள்ளம்

“வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆத னின்னகத் தடக்கி
சாத னீங்க வெமக்கீந் தனையே’
(புறம்: 91 பாடல்: ஒளவையார், வாழ்த்தியல் துறை)

 தமிழ் மூதாட்டி ஒளவையார் நீடு வாழ வேண்டி அவருக்கு, பழந்தமிழ் மன்னன் அதியமான் அரியவகை நெல்லிக்கனி ஒன்றை அளித்தான் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும். இதனை எடுத்துரைக்கும் பாடல் பலருக்குத் தெரிந்திருக்காது. அந்த இனிய புறநானூற்றுப் பாடலைத் தான் மேலே காண்கிறோம்.

விருந்தினராக வந்த தமிழ்ப் பெரும்புலவர் ஒளவை, நீண்ட நாள் வாழ்ந்து  தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், மிகுந்த முயற்சியால் கிடைத்த அருங்கனியை தான் உண்ணாது அவருக்கு வழங்கி மகிழ்ந்த அதியமானின் கொடை உள்ளத்தை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது.

விருந்தோம்பலில் தமிழர்கள் உயர்ந்து  விளங்கினர். அதற்கு எடுத்துக்காட்டாக அதியமான் விளங்கினான். அவனுடைய உயர்ந்த உள்ளத்தை  வாழ்த்தியல் துறையில் ஒளவையார் புகழ்ந்து பேசுகிறார்.

அன்பின் வழியது உயிர்நிலை, “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்ற உயர்ந்த கருத்துக்களுக்கு ஒப்ப பழந்தமிழ் மன்னர்களும், மக்களும் வாழ்ந்தார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமிதம் தரக்கூடிய செய்திகளாகும்.

இரண்டறக் கலக்கும் அன்பு மனங்கள்

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’

மிக அருமையான சங்கப் பாடல் களில் இதுவும் ஒன்று. தமிழர்களின்  மணவாழ்க்கை முறையை இது எடுத்துரைக்கிறது.
என் தாயும், உன் தாயும் யாரோ? என் தந்தையும், உன் தந்தையும் எந்த முறையில் உறவினரோ? நானும் நீயும் எவ்வாறு அறிவோமோ? செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அதனுடன் இரண்டக் கலந்து விடுவது போல நம் அன்பு நெஞ்சங்கள் முன்பின் உறவு இல்லாமலேயே கலந்தன என்பதே இந்த குறுந்தொகைப் பாடலின் பொருளாகும். சங்க காலத்தில் சாதி, சமயம் அற்ற சமுதாயம் இருந்ததை இப்பாடல் நயமுடன் தெரிவிக்கிறது.

 இதில் “செம்புலப் பெயல் நீர் போல’ என்ற உவமை மிகச் சிறப்பாக படிப்பவர்களை இன்புறச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பான உவமைகள் இடம் பெற்றிருப்பது சங்கப் பாடல்களின் தனித்துவமாக உள்ளன. கற்பனை, காட்சியமைப்பு, எளிமை, சொல்லாட்சி, சிந்தனைத் திறம் போன்றவற்றில் சங்காலப் புலவர்களின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

அத்துடன் அக்கால வாழ்வியல் சூழல்களையும் எடுத்துரைக்கும் வரலாற்றுச் சான்றுகளாக  சங்கப் பாடல்கள் திகழ்கின்றன.

எழுத்துத் துறையில் இருப்பவர்கள் சங்கப் பாடல்களை கற்றறிந்தால் அவர்களுடைய திறமை மேலும் சிறக்கும் என்பதற்கு இந்த அழகிய பாடலே சான்று பகரும்.

திருமூலர் உரைத்த மந்திர மொழிகள்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்’
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
இதனை எல்லோரும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை கண்கூடாக காண்கிறோம்.

இந்த மந்திர மொழிகளை உரைத்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் ஆவார். அவருடைய திருமந்திரத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் இந்த இனிய மொழியை அறிஞர் அண்ணா மிக அருமையாகக் கையாண்டார்.

சித்தர்கள் மானுடத்தை அறிந்து சித்தி பெற்றவர்கள். அவர்களில் திருமூலர் முதன்மையான சித்தர்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே’ என்ற திருமந்திர வரிகள் மூலம் ஆன்மீகத்துடன் அவருக்கு தமிழ்மொழியின் மீதும் பற்று இருந்தது புலப்படுகிறது.

தமிழை நன்கு கற்றுத் தேர்ந்த அவர் இறைஞானத்திலும் தெளிவு கொண்டவர். அதனால்தான் சமத்துவத்தை வலியுறுத்தும் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உயர்ந்த நெறியை உலகுக்கு எடுத்துரைத்தார்.

இறை ஞானத்தின் மூலம் எல்லோரும் இன்பம் பெற வேண்டும் என்பதையும் அவர் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று கூறுகிறார்.

“அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
 அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே’

மற்றும்,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’

 போன்ற மிகச்சிறந்த மந்திர மொழிகளைப் படைத்துள்ளார்.
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களை எழுதியதாகக் கூறப்படுகிறது.  அதன் காரணமாக திருமூலர் தான் எழுதிய நூலுக்கு “தமிழ் மூவாயிரம்’ என்றே பெயரிட்டார். பின்னர் இதற்கு திருமந்திரம் என்ற பெயர் ஏற்பட்டது. இது சைவத் திருமுறைகள் பன்னிரெண்டில் பத்தாவது திருமுறையாகும்.

சாகாவரம் பெற்ற சத்தியவரிகள்

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா’
இந்தப் பாடல் வரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது.  இதை எழுதியவர் யார் என்பது வேண்டுமானால் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றனாரின் சாகாவரம் பெற்ற சத்திய வரிகள்தான் இவை.

உலகம் தழுவிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் எந்த ஒரு படைப்பும், எல்லா மனிதர்களாலும் வரவேற்று போற்றப்படும் என்பதற்கு இந்தப் பாடல் வரியை உதாரணமாக சொல்லலாம்.

மனிதர்கள் வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையோடு வாழ வேண்டும்  என்பதைத்தான் உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் கூறுகிறார்கள்.  இதற்கு நாடு போன்ற எல்லைகளும் இருக்கக்கூடாது என்ற சிந்தனையும் வலுத்து வருகிறது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா  ஊரும் நம்முடைய ஊரே; எல்லா மக்களும் நம்முடைய உறவினர்களே என்று கூறியிருப்பதன் மூலம் அந்தப் புலவனுக்கு எந்த அளவுக்கு தொலைநோக்குச் சிந்தனை இருந்திருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

 மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதப் பொதுமை காணும் உயர்ந்த லட்சியப் பார்வையை இந்தப் பாடல் வரி எடுத்துரைக்கிறது.  இந்தப் பார்வை உலக மனித வரலாற்றில் தனித்துவமான முத்திரை பதித்த சீரிய மனித நேய சிந்தனையாகும்.

உலகத்தையே நேசிக்கின்ற இந்த உயர்ந்த பண்பாட்டை  வள்ளுவரும் வலியுறுத்துகிறார். உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும் என்பதை  “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்ற குறளில் கூறுகிறார்.

வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற நாகரிக வளர்ச்சி இல்லாத மிகப்பழங்காலத்திலேயே உலக பொதுமைக்கும், முழுமைக்கும் புலவர்கள்  சிந்தித்து படைப்புகளை அளித்திருப்பது போற்றத் தகுந்ததாகும்.

உலகம் போற்றும் உயரிய சிந்தனை

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற’
(பொருள்: மாசு இல்லாத; அதாவது குற்றமில்லாதஎவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காத மனநிலையே அறமாகும். மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரங்களே.)

உலகம் கண்ட மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான காலத்தை வென்று நிற்கும் திருக்குறளில் மானுடத்தை செழிக்கச் செய்யும் வாழ்வியல் சூத்திரங்கள் அடங்கியுள்ளன என்பதற்கு இந்த ஒரு குறட்பாவே பிறந்த சான்றாகும்.

உள்ளத்தில் இருக்கும் எண்ணம் தான் சொல்லாக வெளிவருகிறது. அந்த சொல் செயலாக உருப்பெறுகிறது. அப்படியானால் எல்லா செயல்களுக்கும் மனம்தான் அடிப்படை.

அந்தமனம் மாசு இல்லாமல் தூய்மையாக இருந்தால் மனிதன் தன்னைத் தானே மேன்மையடைச் செய்து கொள்வதுடன், சமூகத்திற்கும் அறம் செய்தவன் ஆகிறான். இந்த உயரிய குணத்தால்  உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் சண்டை சச்சரவின்றி இனிய நல்லுறவுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

ஆகவேதான் உள்ளத்தில் அழுக்கு, கெட்ட எண்ணங்களுக்கு இடம் தராமல் இருப்பது உயர்ந்த அறம் என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

இந்த ஞாலத்தில்  தோன்றிய எத்தனையோ சிந்தனையாளர்கள், எத்தனையோ அறக்கருத்துக்களை  தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் மிகச் சீரிய சிந்தனையாக இந்த உலகம் உள்ளவரை உயிர் பெற்றுத் திகழும் ஓர் உன்னத கருத்தை இந்த குறட்பாவிலே மிக அழகாக வள்ளுவர் சொல்லியிருப்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

அதனால்தான் அவரை இப்புவியில் தோன்றிய சீரிய சிந்தனையாளர்களில் ஒருவராக அறிஞர் உலகம் புகழ்ந்தேத்துகிறது. இந்த அடிப்படையில் தான் நாடு, மொழி, இனம் போன்ற எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தேவையான வாழ்வியல் நூலாக திருக்குறள் போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட சிறந்த கருத்துக்களின் கருவூலமாக திகழும் முப்பாலை நாம் சுவைத்து இன்புறுவோம்.