ஏப்ரல், 2010 க்கான தொகுப்பு

11 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பூம்புகார்

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas  என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. 

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

(இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010).

தொல்காப்பியர் காலம் கி.மு.711

தொல்காப்பியர் நாள் சித்திரை மாதம் முழுமதிநாள் (சித்திரா பௌர்ணமி) என்றும், அவரது கால எல்லை கி.மு.711 என்றும் தமிழறிஞர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் திருமடத்தில் கோவிலூர் ஆதீனம் மற்றும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் ஆகியன சார்பில் தொல்காப்பியர் காலத்தை நிர்ணயம் செய்வதற்காக தொல்காப்பியர் கால ஆய்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. (2009 டிசம்பர் 26 முதல் 28 வரை)
இக்கருததரங்கு தொடக்க விழாவில் கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் தமிழ்ண்ணல், பேராசிரியர் ஆறு.அழகப்பன், செம்மொழித் தமிழாய்வு மையப் பொறுப்பு இயக்குனர் க.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் புலவர் த.சுந்தரராசன் எழுதிய “தொல்காப்பியர் காலம்’ என்ற நூலும், “தொல்காப்பியர் கால ஆய்வுக் கருத்தரங்கு மலரும் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் 5 அமர்வுகள் நடைபெற்றன. புலவர் அரங்கசாமி, முனைவர் லெட்சுமி  நாராயணன், புலவர் வெற்றியழகன், புலவர் இளங்குமரனார் ஆகியோர் தொல்காப்பியர் காலம் குறித்த 27 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். எண் பேராயக்குழு உறுப்பினர் பாவலர் வா.மு.சேதுராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கை முனைவர் ஆறு.அழகப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

(நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010)

தமிழ் மணக்கும் சிங்களம்

காலஞ்சென்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய தமிழீழம் நூலில் “இலங்கையின் வரலாற்றுப் பின்னணி’ என்ற முதல் அத்தியாயத்தின் ஒரு பகுதியை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்.
பழந்தமிழ் நாடு, செந்தமிழ்நாடும் கொடுந்தமிழ் நாடும் என இரு பிரிவாகப் பிரித்து பேசப் பெற்றது. அவற்றை மருவிச் சூழ்ந்துள்ள நாடுகள் பதினேழு என்று குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றைக்
கீழ்வரும் பழம் பாடலால் அறியலாம்.

சிங்களம் சோனகம் சாவகம்
சீனம் துளுக்கடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கு கலிங்கவங்கம்
கங்கம் மகதம் கவுடம்
கடாரம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி
னேழ்புவி தாமிவையே!

ஈழம் என்பது சிங்களத்தின் மாற்று பெயராகும். சிங்களம் என்னும் பெயர், சிங்கவாகுவின் மகன் விசயன், தன் தந்தையின் பெயரடிப்படையாகக் கொண்டு அøத்ததென்பது பொருந்தாது. சிங்கவாகுவின் மகன் இலங்கைக்கு வந்தது இன்றைக்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்.

ஆனால் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாரதத்தில் சிங்களம் என்னும் பெயர் வந்துள்ளது. இப்பெயர் அங்குப் பேரளவில் விளையும் கறுவாப்பட்டையால் வந்தது என்பதே பொருந்துவதாகும்.

இலக்குமன் இராமச்சந்திர வைத்திய பண்டிதர் என்பார் எழுதிய சமற்கிருத  ஆங்கில அகர முதலியில் சிங்களத் துவீபம் என்பதற்குப் பட்டைத் தீவு என்றே பொருள் தரப் பெற்றுள்ளது.
இனி, சிங்களம் என்னுஞ் சொல்லால் இந்நாடு குறிக்கப் பெறுவதை விட, இலங்கை, ஈழம் என்னுஞ் சொற்களால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப் பெறுவதே பெருவழக்காக உள்ளது.

“தொல்லிலங்கை கட்டழித்த  சிலப். 2,35:3. “பெருமா விலங்கை  புறம்: 1786. “இலங்கைக் கிழவோன்’  புறம்: 3766. “தொல்மா விலங்கை’  சிறுபாண்  119. “இலங்கையில் எழுந்த சமரம்’  சிலப். 2538. “ஈழத்துணவு’ பட்டினப்191. “ஈழம்’ முத்தொள். 263.
முதலிய குறிப்புகளால் இதனை உணரலாம். சேர மண்டிலம், சோழ மண்டிலம், பாண்டிய மண்டிலம், தொண்டை மண்டிலம் என்று மண்டிலப் பெயர் கொண்டு வழங்கும் நாடுகளுள் ஈழ மண்டிலம் என்பதும் ஒன்றாகப் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப் பெறுகிறது.

விசயன் இலங்கைக்கு வந்த கி.மு. 543க்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே, அந்நாடு தமிழ் மக்கள் குடி கொண்டிருந்த நாடாக இருந்தது என்பர் பெர்டோலாக்கி (Bertolocei) பென்னட் (Bennet) ஆகிய  ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், அந்நாட்டில் வழங்கும் பல ஊர்களின் பெயர்கள் இன்னும் தூய தமிழ்ப் பெயர்களாகவே விளங்குகின்றன.

எடுத்துக் காட்டாக பாலாவி, மாதோட்டம், மாந்தை, சிலாபம், குசலை, உடைப்பு, ஆணை மடு பள்ளம், கற்பிட்டி, குதிரை மலை, வில்பற்று, முசலி, மன்னார் மூதூர், கந்தளாய், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி, பச்சிலைப் பள்ளி, கரைச்சிக் குடியிருப்பு, முள்ளிய வலை, குமணை, உகந்தை, அம்பாறை, நல்லூர், அரிப்பு, வெருகல் (ஆறு), பருத்தித்துறை, புத்தளம், வதுளை, கண்டி, கதிர்காமம், கொழும்பூ (இதுவே பின்னர் கொழும்பு என்றானது), சிலாத்துறை, சுண்ணாகம், செம்பியன் பற்று, ஆனையிறவு, கிளி நொச்சி, முல்லைத் தீவு, மண்டைத் தீவு, வேலணை, காரைத் தீவு, எழுவைத் தீவு, அனலைத் தீவு, புங்குடு தீவு, (இது பொன் கொடு தீவு என்பதன் மருவாதல் வேண்டும்) நெடுந்தீவு, பாலைத் தீவு,மாங்குளம், அருவியாறு, ஆனைமேடு, களுத்துறை, அலம்பில் வப்புவெளி, செங்கலம், கோட்டை முனை, பொலனறுவை, மட்டகளப்பு, தும்பளஞ்சோலை, அக்கறைபற்று, வெளிமடை, அப்புத்துளை, வெல்லவாய், புத்தளை, கருக்குப்பனை, முந்நூல், அறுகும்குடா, அம்பாந்தோட்டை, தேவுத் துறை, பாணன்துறை, கமம் முதலிய பரவலான எண்ணிறந்த ஊர்கள் தூய தமிழ்ப் பெயர்களே!

மேலும் இவற்றுள் பல பெயர்கள் பண்டைக் காலந்தொட்டே அங்கு வழங்குகின்றன. தேவாரத்தில் பாலாவி, மாதோட்டம், மாந்தை, திரிகோணமலை, திருக்கேதீசுவரம் முதலிய பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன.

இலங்கையில் பண்டையில் ஆண்ட  சோழ, பாண்டிய அரச வழியினர் மாதோட்டத்தில் கட்டியிருந்த கோட்டை மிக்க வலிமையும் அழகும் வியப்பும் உடையதென்றும், பெருமாக்கலங்கள் மன்னார் கடலில் வருமாயின் அவற்றைத் தன்பால் இழுத்துக் கொள்ளும் காந்தப்பொறிவுடையதாய் இருந்தென்றும் கூறுவர்.

(பார்க்க தமிழ்ச் சங்கமும் ஈழநாடும்  கட்டுரை  செந்தமிழ் தொகுதி 8  பகுதி 10) . உரோமர் இலங்கையிலே வாணிகம் செய்த காலத்திலேயே தமிழர் மாதோட்டத்தைத் தலைநகராக் கொண்டு அரசு செய்தார்கள் என்னும் செய்தி குறிக்கப் பெறுகிறது. Journal Of the Royal Asiatic Society – Ceylon Branch. 1848. P. 73. மேலும் பண்டை நாகர்களுக்கும் இலங்கைக்கும் பெருந்தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப் பெறுகிறது. நாகர்கள் ப ழந்திராவிடர்கள். இராவணன் நாகர்கள் மரபில் வந்தவனே என்பர். ஒரு காலத்தில் நாகர்கள் இலங்கையிலிருந்து இமயம் வரை ஆட்சிசெய்தனர். என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
இலங்கை விசயனால் ஆளப்படுவதற்கு முன்னரே, அங்கிருந்த அரசர்கள் நாகராயர் என்னும் பெயரைப் புனைந்திருந்தனர் என்றும் தெரிய வருகிறது. (Sketches of Ceylon History). இலங்கையிலும் தமிழகத்திலும் நாகபுரம்,  நாகர்கோயில், நாகப்பட்டினம் முதலிய பெயர் கொண்ட பல ஊர்கள் இன்றும் உண்டு. ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் சிங்களவர்களால் நாகத்தீவு என்றே வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அரசிழந்த நாகர்கள் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் வித்னைப் பகுதியிலும் நயினார் தீவிலும் போய் ஒதுங்கியிருந்தார் என்பர். மேலும் முதற்கழகப் புலவர் முடி நாகராயர் என்பாரும், ஈழத்துப் பூதந் தேவனார் என்பாரும், இறையனாராகப் பொருளுரைப் பாடங்கேட்ட இளநாகர் என்பாரும், அவர் மாணவர் நீலகண்டனாரும் ஈழநாட்டுப் புலவர்களாதல் வேண்டும் என்று அறிஞர் பலர் கருதுவர்.

யாழ்ப்பாணத்துக்கு மணற்றி என்றொரு பெயரும் உண்டு. இன்றும் மாந்தையிலும், மணற்றியிலும் பாண்டியர் போர் புரிந்து பெற்ற கொற்றமும் இறையனார் அகப்பொருட் கோவையிற் கூறப்பெறுகின்றது.

மாந்தை என்பது மாதோட்டத்துக்கு அண்மையில் உள்ள ஊர். மணற்றி என்பது மணல் மேடு என்றும் மணற்றிடல் என்றும் ஒரு காலத்தில் வழங்கப் பெற்றதாகத் தெரிகிறது. இஃதொரு காலம் இலங்கையரசர் பாண்டியரொடும் சோழரொடும் பொருதிய போர்க்களமாக விருந்தது. இதன் பகுதிகளுள் ஒன்று இன்றும் களபூமி என்னும் பெயரால் வழங்கும் மாந்தையிலும் மணற்றியிலும் கி.மு.103ல் ஒரு பெரியபோர் நடந்ததென்றும், அப்போரில் பாண்டியர் வாலகம் பாகுவைப் புறங்கண்டு அவனது மனைவியையும் புத்தகலத்தை (பாத்திரத்தையும் கவர்ந்து கொண்டு போனதுடன், ஈழநாட்டையும் தமதடிப்படுத்திப் போயினர் என்றும் மகாவம்சம் கூறுகிறது.

“”இன்னும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ஈழ நாட்டார் எனப்படுவார். அவர் குணபூசண சிங்காரிய அரசர்க்கு அமைச்சராயிருந்து, ஈழ நாட்டில் பல அறச் சாலைகளும், கல்விக் கூடங்களும் அமைத்தார். அஃது அடியார்க்கு நல்லார் குளமென வழங்குகின்றது. அது வண்ணைச் சிவன் கோவில் சந்நிதித்தெருவில் உள்ளது. அதற்கயலிலே அவர் தம் அரசன் பெயராற் அமைப்பித்த குளம் ஆரிய குளம் என இக்காலத்து வழங்குகிறது.

அவர் இருந்த மனை நிலமும் அவர் பெயராலேயே வழங்குகின்றது. அவர் காலத்தில் யாழ்பாணத்தில் தமிழர் மிகப் பேரளவில் இருந்தனர். அவரே அறுபத்து மூன்று நாயன்மார்கள் கோவிலும், பூசைக் கட்டளையும் வகுத்தவர். அக்கோவில் இருந்த இடம் “நாயன்மார்கட்டு’ என்று இன்றும் வழங்குகின்றது.
அடியார்க்கு நல்லார் நிரம்பை என்னும் ஊரில் பிறந்தவர்” (தமிழ்ச் சங்கமும் ஈழ நாடும்  கட்டுரை. “செந்தமிழ் தொகுதி 8; பகுதி 10).
மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள செம்பியன் பற்று,
பல்லவராயன்கட்டு, தொண்டைமானாறு, பாண்டியன் தாழ்வு முதலிய இடப் பெயர்களை நோக்குமிடத்துத் தமிழ்நாட்டு வேந்தர்கள் யாழ்ப்பாணத் தொடர்புடையவர்களாயிருந்தனர் என்பது நன்கு துணியப்படும். இன்னும் மாதோட்டத்துக்கு தெற்கேயுள்ள குதிரை மலை மிக்க பழமையும், யவன நாடுவரையும் பரந்த புகழும் உடையது. அஃதொரு காலம் சிற்றரசருள்ளே எழினியும் பிட்டங்கொற்றும் புறநானூற்றில் பாடப்பட்டோராவர். (மேற்படி கட்டுரை).

இவ்வாறான பல இலக்கிய வரலாற்றுச் செய்திகளால், இலங்கையைத் தொடக்கத்தில் தமிழினத்தவரின் முன்னோர்களே ஆண்டிருந்தனர் என்பது உறுதியாகிறது.

தமிழரின் விழாக்களும், விளையாட்டுக்களும்

தமிழர்களாகிய நாம் இன்றைக்கு பல்வேறு விழாக்களை கொண்டாடுகிறோம். இதே போல முற்காலத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட விழாக்கள் என்னென்ன என்பதை அறிவதற்கு சங்கப்பாடல்கள் தான் நமக்கு பெரிதும் துணை புரிகின்றன.
அவற்றின் மூலம் தமிழர்கள் கொண்டாடிய விழாக்களை ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் நம்மில் பெரும்பாலானோர்க்கு இந்திராவிழாவைப் பற்றித் தெரியும்.

பாண்டிய மன்னன் குடுமிப் பெருவழுதி என்பவன் கடல் தெய்வத்துக்கு முந்நீர் விழா என்ற விழாவை நடத்தியிருப்பது “”குடுமிதங்ககோ முந்நீர் விழவின் நெடியோன்… நன்னீர்ப் பஃறுளி” என்ற பாடல் வரி மூலம் தெரிகிறது.

திருமணங்களை அந்நாளில் “வதுவைவிழா’ என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். மாங்குடி கிழார் பாடல் மூலம் அவ்விழாவில் புதியராய் வந்தோர் சிறப்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதுதவிர சிறுசோற்றுவிழா, பெருஞ்சோற்றுவிழா, வில்விழா போன்ற பல்வேறு விழாக்களும் அக்காலத்தே நடைபெற்றுள்ளன.

அது மட்டுமா? ஆறுகளில் புது வெள்ளம் வரும் போது புதுநீர் விழா, தை மாதத்தில் தைந்நீர் விழா மற்றும் உள்ளி விழா, சித்திரை மாத இந்திர விழா முதலிய விழாக்களையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
விழாக்காலங்களில் பல்வேறு விளையாட்டுக்களிலும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிஞ்சி நிலச் சிறுவர்கள் புற்களால் வில், அம்பு செய்து ஆடும் விளையாட்டு, முல்லை, மருத நிலத்து சிறுவர்களின் குளித்துமணல் கொண்டு விளையாடும் விளையாட்டு, நீர்நிலைகளில் இளம் பெண்கள் ஓரையாடுதல், வீடுகளில் அம்மானை பந்தாட்டம், நெய்தல் நிலச் சிறார்களின் கடலாட்டம், பெண்கள் கடற்கரைகளில் மேயும் சிறு நண்டுகளை பிடித்தாடுதல் போன்ற விளையாட்டுக்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன.

பாலை நிலத்து சிறுவர்களோ வட்டாடுதலிலும் முல்லை நிலத்து மக்கள் ஏறு தழுவுதல் மற்றும் யானை, ஆடு, கோழி போன்றவற்றை மோதவிட்டு வெற்றி கண்டு இன்புற்றுள்ளனர் என்பதும் அப்பாடல்களில் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைக்கு இந்த விழாக்களும், விளையாட்டுக்களும் வடிவம் மாறியும் முறைகள் மாறியும் புழக்கத்தில் இருக்கலாம். சில மறைந்தும் இருக்கலாம்.  ஆனால் ஏறு தழுவுதல் போன்றவை இன்றும் தமிழர்களிடையே நீண்ட கால தொடர்ச்சியாகநடைமுறையில் இருக்கிறது. காலங்காலமாக இந்த விழா தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.