Archive for the 'தமிழிசை' Category

பண்டையத் தமிழிசைக் கருவிகள்

 

தமிழிசை புத்துயிர் பெற்று வரும் இன்றைய சூழலில் நம்முடைய பண்டைய தமிழிசைக் கருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உண்மை மாதமிரு இதழில் (ஜனவரி1631/2010) வெளிவந்துள்ள இது பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் “”செந்தமிழ்ச் சிறப்பு”  நூலில் இடம் பெற்றுள்ள செய்திகளை மேற்க்கோள் காட்டி இத்தகவல்களை உண்மை இதழ் வெளியிட்டுள்ளது.
இதோ அதன் விவரம் :
கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, தாளக்கருவி (கஞ்சக்கருவி) என நான்கு. அவற்றுள், தோற்கருவிகள் “”பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, மதி (சந்திர) வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரவேறு, பாகம், துணையுறுப்பு (உபாங்கம்), நாழிகைப்பறைகூடி, பெரும்பறை” முதலியவாகப் பல்வகைப்படும்.
இவை அகமுழவு, அகப்புறமுழவு புறப்புறமுழவு,  பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும். மீண்டும் பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொதுவுறுப்பு (உவயாங்கம்) என மூவகைப்படும். துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன. நரப்புக்கருவி, பல்வகைத்து, அவற்றுள், பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செய்கோட்டியாழ் ( 7 நரம்பு) என்பன பெருவழக்கானவை.

இவற்றுள் செங்கோட்டியாழே இது போதுள்ள வீணை. நரப்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப் பெயர். வீணை என்னும் பெயர் பிற்காலத்தது, பழமலை (முதுகுன்றம்), மறைக்காடு முதலிய தமிழகத்தூர்ப் பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள் வழங்குவது போன்றே,  யாழ் என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி வருகின்றது. யாழ்கள் செங்கோடு (சிவப்பு தண்டி), கருங்கோடு (கறுப்புத் தண்டி) என இருநிறத் தண்டிகளையுடைய வையாயிருந்தன.

செங்கோட்டையுடைய யாழ் செங்கோட்டியாழ், “”கருங்கோட்டுச் சீறியாழ்” எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. ஆங்கிலத்தில்  Fiddle எனப்படும். கின்னரி தமிழகத்தினின் மேனாட்டிற்குச் சென்றதே.
இதை மேனாட்டாரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்ட தென்றும், அதனால் “இராவணாசுரம்’ எனப்பட்டதென்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி அய்ந்தென்பர். 

 மிடறு= தொண்டை, வாய்ப்பாட்டுக் கருவி, மேற்கூறிய கருவிகளையெல்லாம். தொன்று தொட்டுச் செய்து வந்த வரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே. அவர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத்திற்கே மாதங்கி (பாடினி) என்று தான் பெயர்.

அடேயப்பா! இவ்வளவு தமிழிசைக் கருவிகளா? இச்செய்திகள் மூலம் நம் தமிழிசையின் சிறப்புடன்  தேவநேயப் பாவாணரின் அரிய தமிழாய்வு முயற்சிகளையும் நம்மால் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது.