Archive for the 'கணக்கதிகாரம்' Category

தமிழ் எண்கணிதத்தின் தனித்துவம்

“தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு’
என்பது கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கருத்து. அந்தவகையில்  தமிழர்கள் பல்வேறு துறைகளில் தனித்துவம் மிகுந்தவர்கள் என்பதை  வரலாற்று வழியாலும், இலக்கிய ரீதியாகவும் அறிய முடிகிறது.
எண்கணித முறையிலும் தமிழ் எண்கணித முறை தனித்துவம் மிகுந்தது.  எல்லா மொழிகளிலும் எண்கணிதம் ஒன்று முதலாக இரண்டு, மூன்று என்று எண்ணப்படும். ஆனால் தமிழில் எண்கணிதம் முந்திரி எனப்படும் 320ல்  ஒன்று (1/320) என்ற பின்னத்தில் இருந்து தொடங்குகிறது.
 முந்திரி, அரைக்காணி, அரைக்காணி முந்திரி, காணி, ஒருமா, கால், அரை, முக்கால், ஒன்று என்று தமிழ் எண்கணிதம் எண்ணப்படும். இதனை முந்திரி இலக்கம், முந்திரிவாய்ப்பாடு, முந்திரிவாய், சிற்றெண், சிற்றிலக்கம் எனப் பலவகையாலும் அழைப்பார்கள்.
“முந்திரி அரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்
வந்ததோர் காணிநான் மாவாக்கி ஒன்றொரு
நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை
நாலாக்கி ஒன்றாக நாட்டு’
என்ற 16ம் நூற்றாண்டுக் காரி நாயனாரின் கணக்கதிகாரப் பாடல் கூறுகிறது. அதாவது முந்திரி இரண்டு கொண்டது அரைக்காணி, அரைக்காணி இரண்டு கொண்டது காணி, காணி நான்கு கொண்டது ஒரு மா, மா ஐந்து கொண்டது கால், கால் நான்கு கொண்டது ஒன்று  என்று இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்கள் எண்கணிதத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு இந்தமுறையே ஒரு சிறந்த சான்றாகும்.
நுணுக்கமான ஆராய்ச்சி கணிதத் துறையில் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.