Archive for the 'உயிர் இரக்கம்' Category

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வள்ளலார்கள்

தமிழகத்தைச் சேர்ந்த எத்தனையோ சமயச் சான்றோர்கள் அன்பே கடவுள் என்ற தூய இறை நெறியை பரப்பியுள்ளார்கள். அவர்கள் வழியில் வந்த தாயுமானவரும் இராமலிங்க அடிகளாரும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டிய வள்ளலார்களாக வாழ்ந்தனர்.
கி.பி. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாயுமானவர், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் ஊரில் பிறந்தவர்.
அவருடைய பாடல்கள் இறை நெறியைக் காட்டிலும் அன்பு நெறியை அதிகம் வலியுறுத்துவதாக அமைந்திருப்பதை உணர முடிகிறது.
தம்மைப் போல பிறரையும் கருதி அவர்களுடைய துன்பம் கண்டு மனம் வருந்தும் அவரது உயர்ந்த உள்ளம் அவரது பாடல்களில் தெரிகிறது.
எவ்வுயிரும் என்னுயிர்போல்
எண்ணி யிரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை
செய்யாய் பராபரமே!
எல்லாரும் இன்புற்று
இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும்
அறியேன் பராபரமே!
என்ற  பாடல் வரிகள்  அவரது தூய அன்புள்ளத்தை எடுத்துக்காட்டு கிறது.
எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும் என்று கருதுவதும் எல்லா உயிர்களையும் தம்முயிர் போல நினைப்பதும் உயர்ந்த சிந்தனை களல்லவா?
இதே கருத்துக்களை அவருக்கு பிந்தைய காலத்தைச் சேர்ந்த; அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்  பிறந்த இராமலிங்க அடிகளாரும் பரப்பியுள்ளார்.
சமரச சன்மார்க்க சங்கம், சத்திய தருமச்சாலை ஆகிய அவரது நிறுவனங்களே அடிகளாரின் சமய, சமுதாய தொண்டுக்கு சான்று கூறுபவை.
அவரது உயிர் இரக்கத்தை எடுத்துக் கூறும் “”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.
பசியாலும், பிணியாலும் துன்பப் படுவோரைக் கண்டு அவர் மனமிரங்கி பாடுகிறார் இப்படி;
மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறிதெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன் என்ற அவரது பாடல் வள்ளலாரின் மனமுருக்கத்தை ஓங்கியொலித்து பறைசாற்றுகிறது.
இதையே அவர்,
“”அப்பா நான் வேண்டுதல் கேட்டு
அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான்
அன்பு செயல் வேண்டும்”
என்று தாயுள்ளத்தோடு பாடுகிறார்.
எல்லோரும் சமம் என்ற சமரச சன்மார்க்க கொள்கையையும் பரப்பியவர் வள்ளலார்.
பொதுமையுணர்வு கொண்ட வள்ளலார்,
“”எத்துணையும் பேதமுறாது
எவ்வுயிரும் தம்முயிர் போல்
எண்ணி உள்ளே
ஒத்துரிமையுடையவராய்” உலக மக்கள்  வாழ வேண்டும் என்று இப்பாடல் வழி வலியுறுத்துகிறார்.
எல்லா உயிர்களையும் தம்முயிர் போல எண்ணி  அவற்றின் துன்ப துயரங்களை தமது துன்பதுயரமாக கருதி   எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி  எல்லா உயிர் களையும் சமமாக பாவித்து ஒருமை யுணர்வையும், சமத்துவத்தையும் ஊட்டும் உயர்ந்த கொள்கைகளை இச்சான்றோர்கள் பரப்பியுள்ளனர்.
அவற்றை வலியுறுத்தும் இப் பெரியோர்களின் பாடல்கள் கருத் தினிமையும், மொழியினிமையும் கொண்டவை.
எல்லோருக்கும் புரியும் எளிய நடையில், அதே சமயம் கவிநயத் துடன் உயர்ந்த விழுமியங்களை எடுத்துரைப்பது  இப்பாடல்களின் தனிச்சிறப்பாகும்.
அதனால் இவர்களது பாடல்களைப் போலவே இவர்களும் மக்களின்  உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வள்ளலார்களாக வாழ்கின்றனர்.