Archive for the 'அச்சான முதல் தமிழ் நூல்' Category

தம்பிரான் வணக்கம்

மொழித்துறையில் தமிழுக்கு எத்தனையோ சிறப்புக்கள் உள்ளன. அச்சுத்துறையிலும் தமிழ் முதன்மை பெற்றதை கூறும் நூல் “தம்பிரான் வணக்கம்’. இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் தமிழில் தான் நூல் அச்சடிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.  அந்தவகையில் தமிழில் அச்சிடப்பட்டு வந்த முதல் நூல் “தம்பிரான் வணக்கம்’.
கிறிஸ்துவ மதம் பரப்ப வந்த மேல்நாட்டு பாதிரியார்கள் தமிழ் இலக்கியத்தின் சிறப்பிலும், சுவையிலும் தங்களை பறிகொடுத்தனர். அதன் பயனாக அவர்கள் தமிழ் படித்து பல சிறந்த நூல்களை எழுதினார்கள். வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அந்த வரிசையில் போர்ச்சுகல் நாட்டு  அண்டிறிக்கி பாதிரியார் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு “தம்பிரான் வணக்கம்’ நூல் 1578ம் ஆண்டு கொல்லம் சேவியர் கல்லூரியில் முதன் முதலில் அச்சிடப்பட்டது. இந்த நூல்தான் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகக் கருதப்படுகிறது.
இந்திய மொழிகளிலேயே  முதலில் அச்சுநூல் கண்ட மொழி தமிழ்மொழி என்ற சிறப்பும் இதன் மூலம் வந்து சேர்ந்தது. உலகின் முதுமொழியான தமிழ் இந்த வகையிலும்  சிறப்பு பெற்றிருப்பது குறிப்பிடதக்க அம்சமாகும்.
இதேபோல 1812ம் ஆண்டு “திருக்குறள் மூலம் பாடம்’ என்ற தலைப்பில் திருக்குறள் அச்சிடப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சுவடியிலிருந்து  அச்சேறிய முதல் பண்டைத் தமிழ்நூல் திருக்குறள் தான் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.