Archive for the 'திருப்பாவை' Category

காட்சியை கண்முன் நிறுத்தம் பாடல்

“”ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி,
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி,
வாங்கக், குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை வைணவத்தின் மிக உயர்ந்த பக்தி நூல்களில் ஒன்றாகும். அதன் ஆழப்பொருள் அழகுகளை எல்லாம் விரித்துரைத்தால் ஏடு கொள்ளாது. தமிழ் கொஞ்சும் இந்தப் பாடல்களை படிக்கப் படிக்க திகட்டாது.
மேற்க்காணும் பாடலில், “ஓங்கி உலகளந்த உத்தமன் புகழ்பாடி பாவை நோன்பு மேற்கொண்டால் நாட்டின் நீர்வளம் பெருகும். அதனால் நிலவளம் பெருகும்.

நிலவளத்தால் வயல்கள் வளமாகக் காணப்படும். வயல்களில் நீர்பாய்ந்து செந்நெல் பயிர்கள் செழித்து வளரும். வயல்களில் நெற்பயிர்கள் வயிரத் தூண்களை நட்டு வைத்தாற்போல் ஓங்கி வளர்ந்திருக்கும்.
வளமார்ந்த அவ்வயல்களில் செந்நெல் பயிர்களுக்கிடையே கயல்மீன்கள் அங்கும் இங்குமாகத் துள்ளித் திரியும். அவ்வயல்களில் நெற்பயிர்களுக்கு இடையே  குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அம்மலர்களில் தேன் சுரக்கும்; அத்தேனைப் பருக வண்டுகள் வந்து அம்மலர்களில் அமர்ந்து தேனைப் பருகும்.

பருகிய வண்டுகள் தேன் உண்ட மயக்கத்தில் கண் வளரும்; தூங்கி களிக்கும்.
வயல்களில் அங்கும் இங்குமாகத் துள்ளித் திரிந்த கயல்மீன்களால் தாக்குண்டு அக்குவளை மலர்கள் அசையும், அப்படி அவை அசைவது அக்குவளை மலர்களில் தேனுண்டு உறங்கி மகிழும் வண்டுகளுக்கு ஊஞ்சலாட்டுவது போல் அமையும்’ என்று ஆண்டாள் கூறிக் கொண்டு போகிறார்.
நாட்டுப்புறத்தில் நம்முடைய நெஞ்சை கொள்ளை கொள்ளும் இத்தகைய கொஞ்சும்காட்சிகளை ஐந்தே வரிகளில் மிக அழகாக ஆண்டாள் கூறியிருக்கும் பாங்கு வியக்கத் தக்கது. ஒரு நீண்ட திரைப்படம் எடுத்தால் கூட இத்துணை அழகாக இயற்கைக் காட்சிகளை சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்.
 வார்த்தைகளில் காட்சிகளை கொண்டு வந்து நிறுத்தும் திறன் எல்லோருக்கும் கைவரக் கூடியதல்ல. இலக்கியத்தில் ஆழமான புலமை உள்ளவர்களால் தான் இத்தகைய அருமையான பாடல்களை படைக்க முடியும்.
அந்த வகையில் பக்தி நெறியுடன், இலக்கியச் சிறப்பையும் கொண்டு இந்தப் பாடல்களை படித்துக் கொண்டே இருக்கலாம். அதனை உணர்ந்து படிக்கப் படிக்க தமிழின் இனிமை புரிவதுடன் இறைவனோடு நமக்குள்ள சொந்தமும் புரியும். எனவே, தமிழ் மணக்கும் இந்தப் பாடல்களை நாம் படித்தும், உணர்ந்தும் இன்புறுவோமாக.