பிப்ரவரி, 2010 க்கான தொகுப்பு

தமிழில் நாட்குறிப்பு முன்னோடிகள்

வரலாற்றில் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தனியிடம் உண்டு. 18ம்  நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இவரது பெயரைச் சொன்னதுமே இவர் எழுதிய நாட் குறிப்புகள் தான் நம் நினைவுக்கு வரும்.
நாட்குறிப்பு எனும் வகையில் தமிழில் கிடைத்திருக்கும் முதல் நாட்குறிப்பு இது தான். அது மட்டுமல்ல இந்திய மொழிகளில் கிடைத்த முதல் நாட்குறிப்பும் இவருடைய தமிழ் நாட்குறிப்பே என்று கூறப்படுகிறது.

அந்த வகையிலும் தமிழுக்கு பெருமை சேர்கிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை மட்டும் தெரிவிக்காமல் அக்கால தொழில், வாழ்க்கை, அன்றைய அரசியல், வாணிபம், கல்வி, ராணுவ நடவடிக்கைகள், மக்கள் பிரச்சனைகள், சமுதாய நிலை, வெள்ளையர் மற்றும் பிரெஞ்சு ஆட்சி முறை நிகழ்வுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றுப் பெட்டகமாக திகழ்வதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழில் தனியாக உரை நடை இலக்கியம்  வளரவில்லை. 20ம் நூற்றாண்டில் தான் தமிழ் உரை நடை வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த வகையில் தமிழில் புதுமை புகுத்திய முதல் நாட்குறிப்பேட்டாளரான இவரது நாட்குறிப்பு தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக திகழ்கிறது என்று வரலாற்று அறிஞர்கள் புகழ்ந்து கூறுகின்றனர்.

1736 முதல் 1761 வரை புதுச்சேரியில் நடந்த நிகழ்வுகளை ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவர் தனது நாட்குறிப்பை 6.9.1736 ம் தேதி முதல் எழுத தொடங்கி உள்ளார்.

இவருடைய நாட்குறிப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறவில்லை இடையிடையே விட்டுப்போயுள்ளன. ரங்கபிள்ளை இறந்து ஏறத்தாழ 100 ஆண்டுகள் கழித்து தான் அவை அச்சிடப்பட்டு வெளிக்கொண்டு வரப்பட்டன.

இவரது நாட்குறிப்பு 29 தொகுதிகளாக அரசு ஆவணங்களாக இருந்து போதிலும் இவற்றை யாவரும் படிக்க இயலாத நிலை உள்ளது. ஆயினும் இவற்றின் ஆங்கில மொழியாக்கம் உலகெங்கும் புகழ்பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இவரது நாட்குறிப்புகளின் மூலச்சுவடுகள் உள்ளன.

ஆனந்தரங்கம் பிள்ளை 30.03.1709 அன்று சென்னை பெரம்பூரில் பிறந்தார். 1716ம் ஆண்டு இவரது குடும்பம் பாண்டிச்சேரி குடிபெயர்ந்தது. இவர் 1747ம் ஆண்டு பிரெஞ்சு அரசின் அரசவைப் பதவியான துபாஷ்ஆக (இரு மொழி வல்லுநர்) நியமனம் ஆனார். 1756ம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டார். 12.1.1961ல் ரங்கபிள்ளை புதுச்சேரியில் இறந்தார். பிரெஞ்சு அரசவையில் உயர்ந்த கவுரவத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் சுமார் 25 ஆண்டுகள் எழுதி வைத்த நாட்குறிப்புகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் தேசிய நூலகத்தின் தமிழ் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனந்தரங்கம் பிள்ளையை தொடர்ந்து அவரைப் போன்றே நாட்குறிப்புகள் எழுதியவர் திருவேங்கடம்பிள்ளை. இவர் ஆனந்தரங்கம் பிள்ளையின் இளைய சகோதரரின் மகன் ஆவார். இவரது நாட்குறிப்புகள் யாவும் காகிதத்திலே தான் உள்ளன.
1762 முதல் 1764 முடிய இரண்டு தொகுதிகளாக இவரது நாட்குறிப்புகள் சுமார் 473 பக்கங்களில் உள்ளன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவர்களைத் தவிர நெல்லை            சவரிராயபிள்ளை 1836 முதல் 1874 வரை தமிழில் எழுதி வந்த நாட்குறிப்புகளும், கடிதங்களும் நாட்குறிப்பு வரலாற்று ஆவணமாக திகழ்கிறது.

அடுத்தது ஆற்காடு நவாப் முகமது அலி எழுதி உள்ள நவாப் வாலாஜா நாட்குறிப்புகள். இவை பெர்சிய மொழியில் உள்ளது. இவரது ஆட்சிக்காலம் 1749 முதல் 1795 முடிய ஆகும். மேலும் ராமநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதியின் நாட்குறிப்பும் 1866 முதல் 1903 வரை எழுதப்பட்டுள்ளது.

நாணத்தை பறித்து விடும் காதல்

 காதல் இன்பத்துக்கு இணையானது ஏதுமில்லை. நம் மீது அன்பு செலுத்தவும் நம் மீது அக்கறைப்படவும் நம்மை பாதுகாக்கவும் இன்னொரு உயிர் இருக்கிறது என்றால் அதை விட இன்பம் தருவது வேறேதாவது இருக்க முடியுமா என்ன? காதல் இன்பமானது மட்டுமல்ல சக்தி வாய்ந்ததும் கூட. காதலி, காதலனுக்கு கடைக்கண்ணை காட்டி விட்டால் அவனுக்கு மாமலையும் ஒரு கடுகாகத்தான் தோன்றும் என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியிருப்பதும் இதனால்தான்.

தமிழர்களின் பண்பாட்டில் காதலுக்கும், வீரத்துக்கும் முக்கிய இடம் உண்டு. அவையிரண்டும் நம் பண்பாட்டின் பிரிக்க முடியாத இரு முக்கிய கூறுகள். சங்க இலக்கியங்கள் காதலை புகழ்ந்து பேசுகின்றன. பாடல் நடை, சொல்லாடல்கள், பாடு பொருள், யாப்பு, ஓசை நயம், உவமைகள், கவிதை உருவாக்கம், கற்பனைக் காட்சிகள், வாக்கிய ஒழுங்குகள் என பல்வேறு வகையிலும் சங்கப் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என தமிழறிஞர்கள் பாராட்டி கூறுகின்றனர். அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அப் பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ்கின்றன.

இத்தனைக் காலமும் தமிழறிஞர்களின் வாயிலே வந்து நாவிலே நின்று அவை தமிழ் மணத்தை பரப்பிக் கொண்டிருக் கின்றன. காதலின் முன் எதுவும் குறுக்கே நிற்க முடியாது. பெற்றோரைக் கூட காதலர்கள் துச்சமாக தூக்கியெறிந்து விடுவதை கண்கூடாகக் காண்கிறோம். காதல் வயப்பட்ட ஒரு பெண் இருபது, முப்பது ஆண்டுகள் பெற்று வளர்த்து ஆளாக்கி பாதுகாத்த தாய், தந்தையரைக் கூட ஒரே நாளில் உதறி விட்டு நேற்று வந்த காதலனுடன் செல்வதை காண்கிறோமா இல்லையா? பெற்றோர் மீது அந்த பெண்ணுக்கோ, ஆணுக்கோ பாசமில்லை என்று கூறி விட முடியாது. அதனை விட காதல் சக்தி வாய்ந்தது; பாசத்தை விட காதல் பெரிது என்று தான் கருத வேண்டியுள்ளது. காதலைப் போலவே அதனை எடுத்துரைக்கும் எந்த ஒரு கலை வடிவமும் அது திரைப்படமானாலும் சரிதொலைக்காட்சி தொடரானாலும் சரிகதையானாலும் சரிகவிதை யானாலும் சரி சுவையானதுதான்.

காதலின் ஈர்ப்பு சக்தியே இதற்கு காரணம் என்று கூறலாம். அதிலும் சங்கப் பாடல்களில் காதலை எடுத்துரைப்பது தனிச் சிறப்பானது. நான்கைந்தே வரிகளில் செவ்விய முறையில் காதல் உணர்வை கூறும் பாங்கு, அப்பப்பா! எவ்வளவு சுவையானது? சங்க காலப் பெண் புலவர்களில் ஒளவையாருக்கு அடுத்ததாக அதிகமாக அறியப்பட்டவரான வெள்ளிவீதியார் எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே காண்போம். காமத்தையும் (காதல்) உயிரையும் இணைத்து கபிலர் “”உயிர்தவத் சிறிது காமமோ பெரிதே” என்று கூறியுள்ளார். ஆனால் வெள்ளிவீதியாரோ காமத்தையும், உயிரையும் ஒப்பிட்டு பாடியிருக்கிறார். காமம் வந்தால் பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம் எனப்படும் வெட்கமும் போய் விடும் என்று அவர் அப்பாடலில் கூறுகிறார்.
இனி பாடலை காண்போம் வாருங்கள்.

“””அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி னோங்கு மணல்
சிறுசிறை தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில்லாதே
” (குறுந் தொகை 149)

இதன் பொருள்: நாணமே, நெடுங்காலம் உன்னோடு இருந்து வருந்தியது போதும். இனிமேல் கரும்புக்கு நீர் பாய்ச்சுவதற்கு மண்ணால் இடப்பட்டிருந்த சிறு மணல் பாத்தியின் கரை நீர் நெருங்கி அடிக்கும் போது அக்கரை உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாங்கி காமம் (காதல்) மென்மேலும் நெருக்க என்னிடம் இருந்த நாணமும் போய் விட்டது என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம், காம மிகுதியால் உடைந்து போயிற்று; இல்லாது போயிற்று என காதல் பரிமாணத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
காதலை கவிநயத்துடன் எடுத்துரைக்கும் சங்கப் பாடல்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் இப்பாடலும் சுவையானது. அழகான ஒப்புமை இப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. காதலைப் போலவே அதன் சிறப்பையும் அதனால் மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும் உணர்வுகளையும் கூறும் இது போன்ற சங்கப் பாடல்கள் என்றென்றும் நமக்கு இலக்கிய இன்பம் தருவதாகும்.

துணை நலம் காக்கும் தூய காதல்

“”சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’


மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது
இந்தப் பாடலின் பொருள் வருமாறு: சுனையில் சிறிது அளவே நீர் உள்ளது. ஆண் மான் குடிக்கவில்லை என்றால் பெண் மான் குடிக்காது. ஆனால் அங்கு ஒரு மான் குடிப்பதற்கு ஏற்ற அளவிலேயே நீர் உள்ளது. எனவே ஆண் மான் சுனை நீரில் வாயை வைத்துக் குடிப்பது போல பாவனை செய்து பெண் மானைக் குடிக்க வைக்கிறது. இதுதான் காதலர் உள்ளத்தின் நெறியாகும். (பொருள். கலைஆண் மான்; பிணை பெண்மான்.)
சங்க காலப் பாடல்கள் அக்கால சூழ்நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டுவதுடன், மனித குலத்திற்கு தேவையான நல்ல செய்திகளையும் கொண்டுள்ளது. கணவன்மனைவி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும். ஒருவர் நலத்தை மற்றவர் எண்ண வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பு வேண்டும் என்ற நற்கருத்துக்களை இந்தப் பாடல் எடுத்துக் கூறுவது நம்முடைய உள்ளத்தை கவரக் கூடியதாகும்.
இவ்விதம் வாழக் கற்றுக் கொண்டால் மணமக்கள் வாழ்வு நலமாகவும், வளமாகவும் அமையும் என்று மான்கள் தங்கள் செயல் மூலம் தெரிவிப்பதாக புலவர் நயம்பட கூறுவது இலக்கிய இன்பத்தை அளிப்பதாகும்.

தமிழரின் வீரமும் உழைப்பும்

தமிழரின் வீரமும் உழைப்பும்

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த  வயங்கிருள் கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி!
இது புறப்பொருள் வெண்பாமாலை பாடல்.
தமிழர்கள் உலகின்  மிக மூத்த வீரம் மிகுந்த குடிகள் என்பது இப்பாடலின் பொருளாகும். இதுவெறும் பொய்யுரையோ, புனைந்துரையோ கிடையாது.  தமிழர்கள்  வீர மரபினர் (Martial race). தமிழர்களின் வீரத்தை  புகழ்ந்து  பேசும்  பழந்தமிழ் நூல்கள் பல உள்ளன.
வீரத்தையும், காதலையும் தமிழர்கள் இரண்டு கண்களாகவே போற்றி வந்தனர்.  இவை இரண்டும் தமிழர் பண்பாட்டின் ஒருங்கிணைந்த கூறுகளாகும்.
 அதனால் தான் தமிழர்கள்  தங்கள் வாழ்க்கையை  அகவாழ்க்கை (தலைவன், தலைவியின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை) புறவாழ்க்கை (வீரத்தை எடுத்துரைக்கும் வாழ்க்கை) என்று பகுத்தனர்.  இதனை அகநாநூற்றுப் பாடல்களும், புறநாநூற்றுப் பாடல்களும் விரிவாக எடுத்துரைக் கின்றன.
மானத்தோடு வாழ்வதுதான் வீர வாழ்க்கை. மானத்திற்கு பங்கம் ஏற்பட்டால்  உயிரையும் துறந்து விடுவது தமிழ் மரபு.  இதனை பின்வரும்  குறட்பா தெளிவாக எடுத்துரைக்கிறது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
(பொருள்: மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமானைப் போன்ற குணமுடையோர்கள். மானத்தைக் காக்க வேண்டி உயிரையும் இழப்பாரே தவிர மானத்தை இழக்க மாட்டார்கள்.)
வீரம் மிகுந்த தமிழர்கள் நல்ல உழைப்பாளிகளும் கூட, இந்தியாவில் வாழும் பல்வேறு இன மக்களில் மிக அதிக உலக நாடுகளில் பரவி வாழ்பவர்கள் தமிழர்கள் தான். அந்த வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.
மேலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், சூரினாம், தென்னாப்பிரிக்கா, மாலத்தீவுகள் மொரிசீயஸ் போன்ற நாடுகளில்  காடு, கழனிகளை திருத்தி வேளாண்மை சிறக்க பாடு பட்டவர்கள் தமிழர்களே.  அதுமட்டுமின்றி  இங்கெல்லாம் நெடிதுயர்ந்த கட்டிடங்கள் எழும்ப தங்கள் உழைப்பை அளித்தவர்கள் தமிழர்கள் என்பதை இந்தநாடுகளின் வரலாறே எடுத்துக் கூறும்.

சிவனைக் காட்டிய சித்தர்

உலகம் முழுவதும் தோன்றிய சமயச் சான்றோர்களில் காலத்தால் மூத்தவராகக் கருதப்படுபவர் திருமூலர்.
 இவரது காலம் கி.மு. ஆறாயிரம் என்று நம்பப்படுகிறது.  இவர் மூவாயிரம்  ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு  பாடல் வீதம் மொத்தம் மூவாயிரம் பாடல்கள் எழுதியதாக கருதப்படும் இவரது நூல் திருமந்திரமாகும். அறுபத்து  மூன்று நாயன்மார்களில்  ஒருவரான இவர், பதினெட்டு சித்தர்களில் ஒருவருமாவார்.
இதிலெல்லாம் இவரது தனித்துவமில்லை.  கடவுளுக்கு இவர் சொன்ன விளக்கம் தான் மற்றவர்களில் இருந்து இவரை உயர்த்திக் காட்டுகிறது.
“அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
என்பதே திருமூலரின் கருத்து.
 உலகத்தில் வேறு எந்த ஞானியாவது இவரைப் போல கடவுளைப் பற்றி இவ்வளவு அருமையாகச் சொல்லி யிருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
அன்பு தான் கடவுள்; அன்பு தான் சிவன் என்று இரண்டே சொற்களில் மிக எளிமையாகவும், எல்லோருக்கும் புரியும் வகையிலும் கூறியவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே
என்ற பாடலில் அன்பு இல்லாதவர்கள் இறைவனை அடைய முடியாது என்று திருமூலர் கூறுவதையும்  எண்ணிப் பார்க்க வேண்டும்.
கடவுள் என்றால் இப்படி இருப்பார்; அப்படி இருப்பார்; இவர் தான் கடவுள்; அவர் தான் கடவுள் என்றெல்லாம் சமயச்சழக்குகளுக்கும், சண்டைகளுக்கும் இடம் தராமல் உயர்வு, தாழ்வு கற்பிக்காமல் அன்புதான் கடவுள் என்று சொன்ன ஒரு பெரும் ஞானி இவர். இன்று  வரையிலும்  இதற்கு மாற்றான ஒரு கடவுள் தத்துவத்தை  யாராகிலும் சொல்ல முடியுமா? அல்லது  இவரது கருத்தை மறுக்கத்தான் முடியுமா?
கடவுள் பற்றிய தத்துவ விசாரணை களையும், பல்வேறு விளக்கங் களையும் தந்து மக்களைக் குழப்பாமல் நேரடியாக அன்பு நெறியை  இறைவனாகக் காட்டிய மிகப்பெரிய  ஞானி இவர்.
அது மட்டுமல்ல, உடலுக்கு அழிவுண்டு; உயிருக்கு அழிவு இல்லை என்று பல சமய பெரியோர்கள் கூறுவதில் இருந்தும் இவர் வேறுபட்டு நிற்கிறார்.
உடம்பார்  அழியின் உயிரார் அழிவார்..
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்பது இவரது பாடல். இதன் மூலம் உடம்பு இருந்தால் தான் உயிர் இருக்கும் என்பதை  ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார்.
 உடம்பினை முன்னர் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்ட டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
 என்ற இவரது பாடல் மனம் கொள்ளத்தக்கது.
இப்படிப்பட்ட தனித்துவமான கருத்துகளால் தான் சமயத்துறையில் திருமூலருக்கு எப்போதும்  தனி இடம் உண்டு.  அது உலகம் இருக்கும் வரையிலும் மாறாது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் சமயத்துறையிலும் தமிழினம் தலைசிறந்து விளங்குவது பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும்.

காட்சியை கண்முன் நிறுத்தம் பாடல்

“”ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி,
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி,
வாங்கக், குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை வைணவத்தின் மிக உயர்ந்த பக்தி நூல்களில் ஒன்றாகும். அதன் ஆழப்பொருள் அழகுகளை எல்லாம் விரித்துரைத்தால் ஏடு கொள்ளாது. தமிழ் கொஞ்சும் இந்தப் பாடல்களை படிக்கப் படிக்க திகட்டாது.
மேற்க்காணும் பாடலில், “ஓங்கி உலகளந்த உத்தமன் புகழ்பாடி பாவை நோன்பு மேற்கொண்டால் நாட்டின் நீர்வளம் பெருகும். அதனால் நிலவளம் பெருகும்.

நிலவளத்தால் வயல்கள் வளமாகக் காணப்படும். வயல்களில் நீர்பாய்ந்து செந்நெல் பயிர்கள் செழித்து வளரும். வயல்களில் நெற்பயிர்கள் வயிரத் தூண்களை நட்டு வைத்தாற்போல் ஓங்கி வளர்ந்திருக்கும்.
வளமார்ந்த அவ்வயல்களில் செந்நெல் பயிர்களுக்கிடையே கயல்மீன்கள் அங்கும் இங்குமாகத் துள்ளித் திரியும். அவ்வயல்களில் நெற்பயிர்களுக்கு இடையே  குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அம்மலர்களில் தேன் சுரக்கும்; அத்தேனைப் பருக வண்டுகள் வந்து அம்மலர்களில் அமர்ந்து தேனைப் பருகும்.

பருகிய வண்டுகள் தேன் உண்ட மயக்கத்தில் கண் வளரும்; தூங்கி களிக்கும்.
வயல்களில் அங்கும் இங்குமாகத் துள்ளித் திரிந்த கயல்மீன்களால் தாக்குண்டு அக்குவளை மலர்கள் அசையும், அப்படி அவை அசைவது அக்குவளை மலர்களில் தேனுண்டு உறங்கி மகிழும் வண்டுகளுக்கு ஊஞ்சலாட்டுவது போல் அமையும்’ என்று ஆண்டாள் கூறிக் கொண்டு போகிறார்.
நாட்டுப்புறத்தில் நம்முடைய நெஞ்சை கொள்ளை கொள்ளும் இத்தகைய கொஞ்சும்காட்சிகளை ஐந்தே வரிகளில் மிக அழகாக ஆண்டாள் கூறியிருக்கும் பாங்கு வியக்கத் தக்கது. ஒரு நீண்ட திரைப்படம் எடுத்தால் கூட இத்துணை அழகாக இயற்கைக் காட்சிகளை சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்.
 வார்த்தைகளில் காட்சிகளை கொண்டு வந்து நிறுத்தும் திறன் எல்லோருக்கும் கைவரக் கூடியதல்ல. இலக்கியத்தில் ஆழமான புலமை உள்ளவர்களால் தான் இத்தகைய அருமையான பாடல்களை படைக்க முடியும்.
அந்த வகையில் பக்தி நெறியுடன், இலக்கியச் சிறப்பையும் கொண்டு இந்தப் பாடல்களை படித்துக் கொண்டே இருக்கலாம். அதனை உணர்ந்து படிக்கப் படிக்க தமிழின் இனிமை புரிவதுடன் இறைவனோடு நமக்குள்ள சொந்தமும் புரியும். எனவே, தமிழ் மணக்கும் இந்தப் பாடல்களை நாம் படித்தும், உணர்ந்தும் இன்புறுவோமாக.

முப்பால் அறிஞரின் சமூக அக்கறை

“அவ்விய செஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்’
(பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.)

எந்த ஒரு சமுதாயத்திலும் கேடுகளும், தீங்குகளும் மலிந்தே கிடக்கின்றன. நல்லவர் என்பதாலேயே ஒருவர் வெற்றி பெற்று விடுவதில்லை. அதற்கான சூழ்நிலைகளும், நியதிகளும் சமூகத்தில் இருந்தால்தான் நல்லவர்களுக்கு மதிப்பு இருக்கும்.
கேடுகள் நிறைந்த சமூக நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. வள்ளுவர் காலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல போலும். இந்த நிலைமைகளைக் கண்ணுற்ற வள்ளுவர் அதற்காக வருந்தியுள்ளார். அவருடைய வேதனையின் வெளிப்பாடுதான் மேற்காணும் குறளாக வடிவெடுத்துள்ளது.
அறக்கருத்துக்களை சொல்லி வெற்று உபதேசியாக மட்டும் அவர் இருக்கவில்லை. கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற சமூக விஞ்ஞானியாக வள்ளுவர் திகழ்ந்துள்ளார். அதனால்தான் தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய குறைபாட்டை தனது பாடலில் பதிவு செய்து அதற்கான ஆய்வை மேற்கொண்டு சமூகத்தை திருத்த வேண்டும் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த குறட்பா மூலம் புலனாகும் ஆழமான அவரது சமூக நலன் நாடும் வேட்கையையும், ஆய்வு மனப்பான்மையையும் சமூகவியலாளர்கள் வியந்து போற்றுகிறார்கள்.
1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் வகையில் தனித்துவமானதுதான். அவற்றிலும் ஒரு சில குறட்பாக்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிந்தனைச் செழுமையில் வேறுபட்டு தனித்து மிளிர்கின்றன. அத்தகையவற்றில் ஒன்றுதான் இந்த குறட்பா.
வள்ளுவர் நீதிநூல் மட்டும் எழுதியவர் அல்ல. அவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அந்த உண்மையை இந்தக் குறட்பா பதிவு செய்து வைத்துள்ளது. அதன் ஆழமான பொருளை நுணுகி ஆராய்ந்து படிக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்.

இயற்கைக் காட்சியின் இலக்கியப்பதிவு

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசையாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக’ (கபிலர்: அகம்:82)
எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள் என்றாலே எல்லோருக்கும் கொள்ளைப் பிரியம்தான். நேரில் பார்ப்பதாக இருந்தாலும் அல்லது அதனைப் பற்றி படித்து சுவைப்பதாக இருந்தாலும், பொதுவாக யாருக்கும் அலுப்பு தட்டாது.
சங்கப்பாடல்களை அக்கால வாழ்வியல் செய்திகளை பதிவு செய்து வைத்திருக்கும் இலக்கிய குறுந்தகடுகள் என்று கூட கூறலாம். மேற்க்காணும் பாடலும் மலையும், மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் இயற்கை காட்சியை மிக தத்ரூபமாக விவரித்து அதனை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
குறிஞ்சி நிலத்தின் மலைகளில் வளர்ந்த மூங்கில் அசைந்தாடுகிறது. அந்த மூங்கில் துளைகளிலே கோடையின் அனற்காற்று விரைந்து நுழைந்து செல்கிறது. அவ்வாறு காற்று நுழைந்து செல்லும் போது குழலிசையாகி அது ஒலிக்கிறது.
மலையிலிருந்து சீறிப் பாய்ந்து ஓடும் அருவியின் இனிய ஓசை பாடுவது போன்று விளங்குகிறது. மலையெங்கும் காணப்படும் பூக்களில் வண்டுகள் ஒலிப்பது யாழிசையாகத் தோன்றுகிறது என்று கபிலரின் இந்தப் பாடல் பேசுகிறது.
இயற்கைக் காட்சிகளுடன் புலவரின் கற்பனையும் நயம்பட சேர்ந்தால் அந்தப் பாடல் திகட்டாத இலக்கிய இன்பத்தை அளிக்கவல்லது என்பதற்கு இந்தப் பாடலே நல்ல சான்றாகும்.
சங்கத் தமிழர்கள் வாழ்க்கை இயற்கையோடு இயைந்து இருந்தது என்ற உண்மையும் இந்தப் பாடலின் மூலம் புலனாகிறது. குற்றாலம் போன்ற இயற்கை எழில் மிகுந்த ஊர்களுக்கு சென்றால் ஏற்படும் இனிய அனுபவத்தை இந்த ஒரே ஒரு பாடலின் வழியாகவே பெற முடிகிறது. சங்கப் புலவரின் பாடல்களில் இப்படிப்பட்ட இன்சுவைகள் ஏராளம் பொதிந்திருப்பதை அதனை படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும்.

அறிவுக்கு ஆசானின் அரிய விளக்கம்

“சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.’
(இதன் பொருள்: அலையும் ஐம்புல உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, நல்லவற்றை உள்ளும், தீயவற்றை வெளியிலும் தள்ளும் கருவியே அறிவாகும்.)
அறிவுடைமைக்கு, ஆசான் திருவள்ளுவர் தந்திருக்கும் இவ்விளக்கம் அறிஞர் உலகத்தை வியப்பில் ஆழ்த்துவதாகும்.
அறிவுடைமையின் பண்பு நலன்களையும், பயன்களையும் வகுத்தும், தொகுத்தும், பகுத்தும் அவர்
கூறியிருக்கும் முறை சிறப்பானது.
அறிவு அற்றம் காக்கும் கருவி (அழிவிலிருந்து காக்கும் கருவி), மெய்ப்பொருள் காண்பது அறிவு (நுட்பங்களை புரிந்து கொள்வது), கூம்பலும் இல்லது அறிவு (ஐயமற்ற தெளிவுடையது), என அறிவின் பண்புகளை வள்ளுவர் விரித்துரைக்கிறார்.

எந்த ஒரு பொருளையும் ஆய்வு செய்ய அதனுடைய இயற்பியல் பண்புகள், வேதியியல் பண்புகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் திருவள்ளுவர் அறிவுடைமை பற்றி மிக நுணுக்கமாக ஆய்வு செய்து கருத்துக்களை வரிசைப்பத்திக் கூறி இருக்கும் பாங்கு சிறப்பானது.
அவருடைய விளக்கத்தின் உச்சக்கட்டமாக இருப்பது “நன்றின்பால் உய்ப்பது அறிவு’. அதாவது அறிவு என்பது நல்லவற்றை மட்டுமே செய்யும்; நினைக்கும். அதுதான் அறிவு.

அவருடைய இந்த கருத்து ஆழமாக எண்ணத்தக்கது. ஒரு பெரிய விஞ்ஞானி தன்னுடைய அறிவாற்றலை இந்த சமூகத்திற்கு தீமை செய்ய பயன்படுத்துவானால் அவருக்கு இருப்பது அறிவுடைமை அல்ல என்று வள்ளுவர் கூறுகிறார். இதனை யாரால் மறுக்க முடியும்.

அதனால் தான் எத்துணை பெரிய படிப்பாளியாக இருந்தாலும் அவர் பயனற்றதீங்கான செயல்களை செய்தால் அவரைக்காட்டிலும் சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட அவரை அறிவில்லாதவர் என்று கூறக்கேட்கிறோம்.
நுண்பொருள் காண்பது அறிவு என்று உரைத்த வள்ளுவர் இதை நுணுக்கமாக உணர்ந்து நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறுவது அவரது சிந்தனைச் செழுமையை காட்டுகிறது.
அதுமட்டுமா? அறிவுக்கு முதன்மை கொடுத்த சிந்தனையாளர் அவர். அதன் மூலம் மனித மேன்மையை பறைசாற்றியவர். இதனால்தான் திருக்குறளை மனித குலமே புகழ்ந்து பேசுகிறது.

அனைத்திலும் உயர்வான தூய அன்பு

“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர்அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும், நாடனொடு நட்பே.’
உண்மையான அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்புதான் உயர்வானது. அன்பில்லாதவர்கள் நடைபிணத்திற்கு ஒப்பானவர்கள். அன்பைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
சகோதரர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பதும் உண்மையான அன்புதான். பிறர் நலம் நாடக் கூடியது; அகந்தையில்லாதது; பணிவானது என்று அன்பின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம். அன்புடையவர்கள் பிறருக்காக் தங்களுடைய உயிரைக் கூட தியாகம் செய்வார்கள் என்பதை “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவரும் புகழ்ந்துரைக்கிறார்.
இந்த அடிப்படையில்தான் காதல், காலம் காலமாக போற்றப்பட்டு வருகிறது. அதுவெறும் இனக்கவர்ச்சியால் மட்டும் எழுவது அல்ல. தலைவனும், தலைவியும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் தூய்மையான அன்பை வெளிப்படுத்துவதால்தான் காதலை இந்த உலகம் புனிதமானது என்று போற்றுகிறது.
இந்த கருத்தை மேற்காணும் குறுந்தொகை பாடல் மிக அழகாகச் சொல்கிறது. பரந்த நிலத்தினும் அகலமானது; வானத்தை விடவும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் ஆழமுடையது என்னுடைய தலைவனின் நட்புகாதல் என்று தலைவி தன்னுடைய தலைவனின் உயர்வையும், சிறப்பையும் தோழியிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
தலைவனின் நட்பு உலகிலுள்ள அனைத்து பொருட்களையும் விட சிறந்தது என்ற உறுதியான கருத்துடைய தலைவியின் காதல் உணர்வு மற்றும் நம்பிக்கையின் மூலம் இரண்டு உள்ளங்களுக் கிடையே எழுந்து நிற்கும் தூய அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோல அக்கால வாழ்வியல் செய்திகள் பலவற்றை சுவைபட எடுத்துக் கூறும் சங்கத் தமிழ் பாடல்களை இலக்கியச் சுரங்கம் என்றும் கூறலாம்.