மார்ச், 2010 க்கான தொகுப்பு

தமிழ் வளர்த்த ஐரோப்பியர்

 (தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட மேலைநாட்டு அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இது பற்றி “தமிழ் இலெமுரியா’ மாத இதழில் (2010, மார்ச் 15 ஏப்ரல் 14) தமிழ் மொழி காத்த ஐரோப்பியர்கள் என்ற தலைப்பில் மணவை வே.வரதராசன் எழுதி வெளியாகியுள்ள கட்டுரையை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்)

அமிழ்துக்கு அமிழ்தென்றுதான் நிலைப் பெயர். தமிழுக்கும் அமிழ்தென்று பேர் என உவமையோடு தமிழை அமிழ்தாக்கி அதன் சுவையை உணர்வோடு ஊடுருவ விட்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் சிறப்பை நாம் அம்மொழியின் வழித்தோன்றலாக வந்ததனால் மட்டும் பெருமையோடு கூறவில்லை; அந்நியர்களாகிய ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமை கொள்ள வந்த போது தமிழ் மொழியின் வளத்தையும், பொலிவையும் கண்ணுற்று வியந்து போற்றியுள்ளனர். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே அதன் சிறப்பை உணரச் செய்து, வட மொழித் துணையுடன் வளர்ந்தமொழி தமிழ் என்னும் தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் வழிகோலிய பெருமை, மேலை நாட்டு நல்லறிஞர்களையே சாரும். உலகோர் கருத்தினிலும் தமிழ் மொழியின் மேன்மையை இடம் பெற வைத்தனர். அவர்கள் சமயத்தைப் பரப்பத் தமிழகத்திற்கு வந்தவர்களாயிருப்பினும், தமிழ் மொழியின் இனிமை, மாட்சி, சிறப்பு, தொன்மை, எளிமை ஆகியவற்றைக் கற்றுணர்ந்து தங்கள் வாழ்நாளைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே கழித்தனர். தமிழ் இலக்கியங்களில் கண்ட இயற்கை நலம், அறிவு விளக்கம், அன்பு வளர்க்கும் பண்பு ஆகியவற்றை கற்றுத் தெளிந்தனர். தமிழ்மொழியை முதன்முதலாக அச்சில் ஏற்றிப் பல நூல்களையும், சிற்றிதழ்களையும் வெளியிட்டனர். உரைநடையில் சொற்களைப் பிளந்து எழுத வழிகாட்டினர். மேல்நாட்டு மொழிகளுக்கொப்பத் தமிழ் அகராதியையும் இயற்றினர். அவர்கள் வரவு தமிழ்மொழிக்கே ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறலாம். அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.

சீகன் பால்கு

16831705 இல் கிறித்துவ சமயத் தொண்டாற்ற வந்தவர். தமிழ் மொழியின் இனிமை, தொன்மை, மேன்மை, எளிமை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியம் கண்ட இயற்கைத் தன்மை, அறிவார்ந்த கூர்மை, அன்பு வளர்க்கும் மாண்பு, அறநெறியின் உயிரோட்டம் ஆகியவற்றால் கவரப்பட்டுத் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்வதிலேயே தம் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தார். தமிழ் மொழியில் சமயம், மருத்துவம், வரலாறு முதலானவற்றில் உள்ள நாற்பதாயிரம் சொற்களைத் தொகுத்து ஒரு மொழி அகராதியை உருவாக்கினார். அவர் தொகுத்த செய்யுள் (சொல் பொருள் நூல் ) அகராதியில் பதினேழாயிரம் இலக்கிய வழக்குச் சொற்களும், மரபுத் தொடர்களும் இடம் பெற்றன. நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி ஆகிய செய்யுள்களை செருமானிய மொழியில்பெயர்த்துள்ளார். ஆசியாக் கண்டம் முழுதும் சுற்றிப் புகழோடு பிரிட்டன் நாட்டிற்குச் சென்றபோது, ஜார்ஜ் மன்னர் தலைமையில், நாட்டின் உயர் மதத் தலைவரான கான்டர்பரி ஆர்ச் பிஃஷப் இலத்தின் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார். அதற்கு சீகன்பால்கு என்னுடைய மறு மொழியை நான் ஒரு மொழியில் பேசப் பேகிறேன் அது இறைவனால் மனிதருக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்துள் முதன்மையானது. அதுவே தமிழ் மொழி எனக் கூறி தமிழின் பெருமையை அவர்கள் உணருமாறு செய்தார்.

கிரன்ட்லர் பாதிரியார்

 இவர்செருமனி நாட்டைச் சேர்ந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கிய மருத்தவ முறையின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கும் ஒரு நூலை செருமானிய மொழியில் இயற்றினார். செருமானியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் எனவும் கூறினார். இதனால் தமிழரின் அறிவுத் திறன் மேல் நாட்டவரால் ஏற்கப்பட்டது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்த சார்ல் கிரவுல் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழிலே உள்ள கைவல்ய நவநீதம், சிவஞான சித்தியார் போன்ற சில தத்துவ நூல்களைச் செருமானியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளையும் இலத்தின், செருமன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்தார்.

ராபர்ட டி நோபிலி

 இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டி நோபிலி என்னும் பாதிரியார் சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்து தமிழையும், வடமொழியையும் கற்றுக் கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியும் போர்த்துக்கீசிய அகராதி ஒன்றைத் தொகுத்தும் உள்ளார். தத்துவ போதகர் என்னும் பெயருடன் தம்மை இத்தாலிய நாட்டு அந்தணர் எனக் கூறிக் கொண்டார். அதை மக்களிடம் காட்டிக் கொள்ள தலையிலே குடுமி, கையிலே கமண்டலம், காலிலே பாதக்குறடு, காது குத்திக் கொண்டு, நெற்றியில் சந்தப் பொட்டு இட்டு தமிழகத் துறவியைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு தம்மை ஐயர் என்னும் நிலையைக் கொண்டிருந்தார். சமசுகிருதச் சொற்கள் கலவாத தொன்மை இலக்கியங்கள் இருந்தனவென்றும், வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பதையும் ஆய்ந்தளித்தார்.

வீரமாமுனிவர்

 இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெசுகி 1711ம் ஆண்டு தமிழகத்துக்குச் சமயத் தொண்டு புரிய வந்தார். அவர் தமிழுடன் அந்த இனமொழிகளான தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வடமொழியும் கற்றுத் தேர்ந்தார். பின் வீரமாமுனிவர் என்னும் பெயர் கொண்டு தமிழிலே தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்தார். வடசொல் விரவிய மணிப் பிரவாள நடையை அறவே விலக்கித் தனித்தமிழ் உரைநடையைக் கொண்டு வந்தார். எனவே தமிழ் உரைநடையின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார். தொன்னூல் இலக்கணம் இயற்றி அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து கூறுகளையும் விளக்கியுள்ளார். சதுரகராதியையும் இயற்றியுள்ளார். தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் இலத்தினில் மொழியாக்கம் செய்தார்.

டாக்டர் வின்சுலோ

 கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையே தமிழகம் வந்த அமெரிக்க நாட்டு மொழியறிஞர். அவர் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை உணர்ந்து தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டி, தமிழ் ஒரு மூல மொழியாக ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளப்படவேண்டும் எனவும் வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் சிறப்பு வியப்பளிப்பதாகவும், சங்க இலக்கியம் தமிழுக்குப் பெருமையளிப்பவையாகும் எனவும், தமிழ் செய்யுள் வடிவிலும், நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுளைக் காட்டிலும் தெளிவுடையதாகவும், திட்ப, நுட்பமுடையது, கருத்தாழமுடையது எனவும், தமிழ் மொழி நூல் மரபிலும், பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல் வளம் கொண்டது எனவும் கூறிச் சிறப்பித்துள்ளார்.

டாக்டர் கால்டுவெல்

 இவர் கி.பி. 1838 ல் சமயத் தொண்டு புரியத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திராவிட மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற நூலை இயற்றியுள்ளார். வடமொழியின் துணையின்றித் தமிழ் மொழி இயங்காது என்னும் தவறான கொள்கையை உதறி எறியவும், எம்மொழியின் துணையுமின்றித் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்னும் உண்மையை உலகுக்கு அறியச் செய்தவர் டாக்டர் கால்டுவெல் ஆவார். இவர் நிகழ்த்திய ஆய்வு நூலே வடமொழி ஆதிக்கத்தால் கேடடைந்த தமிழையும், தமிழறிஞர்களின் எண்ணங்களையும் மாற்றுவதற்குப் பெரிதும் அடிப்படையாகப் பயன்பட்ட நூலாகும். தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தனது தனித்தன்மை காத்து, தன்னை அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்கிறது என்னும் பேருண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கால்டுவெல் ஆவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத் தொண்டு புரிந்தார். இங்கு வாழும் மக்களைப் பற்றித் தமிழ் உரைநடையில் “ஞானக்கோயில்’, “நற்குணத்தியான மாலை’ போன்ற நூல்களை இயற்றினார்.

ஜியுபோப்

 இவர் வடஅமெரிக்காவில் உள்ள நோவாஸ் கோஷியா மாநிலத்தைச் சேர்ந்தவர். சமயப் பணிக்காக 1839 ம் ஆண்டு தமிழகம் வந்தார். இவர் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சமய நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பயின்றார். சைவ சித்தாந்த நெறி, திராவிட அறிவின் தேர்ந்த தெளிந்த நிலையின் பயன் எனப் பாராட்டியுள்ளார். யாவும் ஆசிரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாள்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்ட அக்கருத்து தமிழின் பெருமையை நிலை நிறுத்தத் துணையாயிற்று. சமசுகிருதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது மட்டுமின்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனித்து நிற்பதுடன் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங்கவரும் திறமும் கொண்டது தமிழ் இலக்கியம் எனக் கூறியுள்ளார். இவர் தமது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று செதுக்கி வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

கமில்ஸ் சுலபில்

 இவர் செக்கோசுலோவாகிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர். உலகில் எந்த மொழியின் வரி வடிவத்திலும் காணப்படாத தனிச் சிறப்புகளைத் தமிழ் வரிவடிவத்தில் காணலாம். ஆங்கிலத்தில் அத்தகைய அழகு கிடையாது. தமிழில் ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுதுகின்றஓசை நயத்திற்கேற்ப அதன் வரிவடிவமும் அமைந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

இன்னும் மாச்சுமுல்லர், பெர்சிவல் பாதிரியார், டாய்லர் போன்ற மேனாட்டறிஞர்களும் கற்றுத் தேர்ந்து தமிழைப் போற்றியுள்ளனர்.

எனவே ஐரோப்பியர் ஆதிக்கத்தை தமிழகம் பெற்றாலும் அதற்கு முன்னர் நடந்த மொழியழிப்பு ஒழிந்து உள்ள நிலையிலிருந்து தமிழை ஓங்கி வளரச் செய்தனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டோ, தமது சமய வளர்ச்சி நோக்கத்தோடோ, மண்ணாசை எண்ணம் கொண்டோ வந்திருந்தாலும், அவர்களால் தமிழுக்கு விளைந்த நன்மை மிகுதி. வாழ்க அவர்கள் தொண்டு. ஐரோப்பியர்கள் வராதிருந்தால் தமிழகம் எப்படி இருக்கும்? ஒரு கணம் நினைப்போம். நம் மொழியும் பண்பாடும் எங்கோ அழிந்து நாம் எப்படியெப்படியோ செப்பிடு வித்தைகளால் சீரழிந்திருப்போம். நம் பெருமையைக் காக்க மொழி வளத்தைப் புதுப்பிக்க வந்தனன் அயலான் வாழியவே தமிழ்.

மரம் நடும் மறத்தமிழர் மரபு

தெய்வத்தொண்டைக் காட்டிலும் மேன்மைமிக்கது தேசத்தொண்டு. சிறுபஞ்சமூலம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். சிறுபஞ்சமூலம் என்பது, கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி முதலிய ஐந்து பொருள்களின் கலவை என்பர். இம்மருந்துகள் மக்களின் உடல் நோயைப் போக்குவது போல், சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மக்கள் மனதைச் சுத்தம் செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பொருள்கள் கொண்ட கருத்துக்கள் இருக்கும்.

“”வார் சான்ற கூந்தல் வரம்பு உயர; வைகலும் நீர் சான்று உயரவே நெல் உயரும்: சீர்சான்ற தாவாக் குடி உயரத் தாங்கரும் சீர்க்கோ உயரும் ஓவாது உரைக்கும் உலகு”. இப்பாடலின் கருத்து: நீண்ட கூந்தலை உடைய பெண்ணே நிலத்திலே நீர் தங்கும் படியாகக் கரை உயர்ந்திருக்க வேண்டும், கரை உயர்ந்து காணப்பட்டால் தான் குளத்திலே நீர் தேங்கி இருக்கும். நிலத்தடி நீர் குறையாது. தண்ணீர் தேங்கி இருந்தால் தான் வேளாண்மைப் பயிர் செய்ய முடியும். நெற்பயிர் ஓங்கி செழித்து வளர்ந்தால் தான் குடிமக்கள் யாவரும் பஞ்சம், பசியின்றிப் பல
செல்வங்கள் பெற்றுச் செழுமை யுடன் வாழ்வார்கள். நாட்டின் குடிமக்கள் சிறந்து வாழ்ந்தால் தான் அந்நாட்டு மன்னனும் உயர்வாக மதிக்கப்படுவான், அவனது அர சாட்சியும் சிறந்து விளங்கும் என்பதாகும்.

தரிசு நிலங்களைத் திருத்தி, கழனிகளாக்கி நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தான் அந்நாட்டில் பஞ்சம் என்பதே இருக்காது. மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள். அதனால், காடுகளை அழித்து விடக்கூடாது. அவற்றைப் பாதுகாக்க வேண்டும். புதிய மரங்களை வளர்க்க வேண்டும் என்று நமது பழந்தமிழ் இலக்கியங்களிலே  சொல்லப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததும் அக்குழந்தையின் நினைவாக ஒரு மரம் நடுவது நமது தமிழ்நாட்டின் மரபாகவே இருந்து வருகிறது.

தலைவனோடு உரையாடும் தலைவி, அருகில் புன்னைமரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க, அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்கிறாள். திருமண நாளில் உதிமரம் நட்டு வளர்ப்பதும்,  ஒவ்வொரு மனிதனும் தனது வாழ் நாளில் ஐந்து பால்தரும் மரங்களை நட்டுப் பயிர் செய்ய வேண்டும் என்பதும் நம் தமிழரின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. புலவர் காரியாசான், நாடு நன்றாக வாழ, நாட்டிலே நீர்வளம் குறையாது உணவு உற்பத்தி பெருக, மக்கள் மகிழ்வோடும் ஒற்றுமையோடும் வாழ நல்ல கருத்துகளை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடியிருப்பது போற்றத்தக்கதாகும்.

“குளம் தொட்டுக்கோடு பதிந்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி
வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு,
என்று இவ்ஐம்பால் படுத்தான் ஏகும் சுவர்க்கத்து இனிது” (பா66).

“நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடில் லாமல் இருக்க பெரிய குளத்தைத் தோண்ட வேண்டும். (நீர்ப்பாசனம்):தளிர்விட்டு வளரக்கூடிய மரக் கிளைகளை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். (பசுமைப்புரட்சி), மக்கள் நடக்க முள்<<<, முடல் இல்லாத பாதைகளை மேடு பள்ளங்கள் இல்லாமல் செப்பனிட்டு வைக்க வேண்டும். (சாலை வசதி), தரிசு நிலங்களைப் பக்குவப்படுத்தி விளைநிலங்களாக மாற்ற வேண்டும். (தரிசு நில மேம்பாடு); சுற்றிலும் கரை கட்டப்பட்டுள்ள கிணறுகளை வெட்ட வேண்டும். (குடிநீர் வசதி), இந்த ஐந்து அறப் பணிகளையும் தேசத்திற்காக எவன் செய்கிறானோ அவன் சொர்க்கம் சென்றடைவான்’ என்கிறது சிறுபஞ்சமூலப் பாடல்.
சிறுபஞ்சமூலம் கூறும் இக்கருத்துகள், இந்நாளில், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துகள் தானே?
(செய்தி ஆதாரம்  07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் கா.காளிதாஸ் என்பவர் எழுதியுள்ளார்)

முப்புள்ளி எழுத்தின் மூலம்

உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரி வடிவ எழுத்து தோன்றியது. “அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. “அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துக்கள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர் மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் “தனிநிலை’ எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளி களாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப்பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
வழக்காற்றில் இதை “ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். “ஆயுத’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்துவகைச்
சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத் திரையாக ஒலிக்கும்பொழுது “ஆய்தக்குறுக்கம்’ என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது  (முள்+தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும் பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னேருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாக கருவி எனப்பொருள்படும். ஆயினும், போர்க்கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர் பெற்றது. போர்வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தைத் தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின்  வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக்கொள்வான். அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு வட்டவடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத் தில் கைப்பிடி இருக்கும். மறு பக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும்.
இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டு வதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப்பெற்றது.

“போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்க்கருவிகளில் சூலமும் ஒன்று, சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும்.  அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்துகொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமையாலும் முப்புள்ளி எழுத்து ஃ, ஆய்தம் எனப்பெயர் பெற்றது’ என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டுள்ளேன்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது. (செய்தி ஆதாரம்  07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் புலவர் ம.நா.சந்தானகிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார்)