Archive for the 'வள்ளுவம்' Category

முப்பால் அறிஞரின் சமூக அக்கறை

“அவ்விய செஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்’
(பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.)

எந்த ஒரு சமுதாயத்திலும் கேடுகளும், தீங்குகளும் மலிந்தே கிடக்கின்றன. நல்லவர் என்பதாலேயே ஒருவர் வெற்றி பெற்று விடுவதில்லை. அதற்கான சூழ்நிலைகளும், நியதிகளும் சமூகத்தில் இருந்தால்தான் நல்லவர்களுக்கு மதிப்பு இருக்கும்.
கேடுகள் நிறைந்த சமூக நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. வள்ளுவர் காலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல போலும். இந்த நிலைமைகளைக் கண்ணுற்ற வள்ளுவர் அதற்காக வருந்தியுள்ளார். அவருடைய வேதனையின் வெளிப்பாடுதான் மேற்காணும் குறளாக வடிவெடுத்துள்ளது.
அறக்கருத்துக்களை சொல்லி வெற்று உபதேசியாக மட்டும் அவர் இருக்கவில்லை. கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற சமூக விஞ்ஞானியாக வள்ளுவர் திகழ்ந்துள்ளார். அதனால்தான் தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய குறைபாட்டை தனது பாடலில் பதிவு செய்து அதற்கான ஆய்வை மேற்கொண்டு சமூகத்தை திருத்த வேண்டும் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த குறட்பா மூலம் புலனாகும் ஆழமான அவரது சமூக நலன் நாடும் வேட்கையையும், ஆய்வு மனப்பான்மையையும் சமூகவியலாளர்கள் வியந்து போற்றுகிறார்கள்.
1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் வகையில் தனித்துவமானதுதான். அவற்றிலும் ஒரு சில குறட்பாக்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிந்தனைச் செழுமையில் வேறுபட்டு தனித்து மிளிர்கின்றன. அத்தகையவற்றில் ஒன்றுதான் இந்த குறட்பா.
வள்ளுவர் நீதிநூல் மட்டும் எழுதியவர் அல்ல. அவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அந்த உண்மையை இந்தக் குறட்பா பதிவு செய்து வைத்துள்ளது. அதன் ஆழமான பொருளை நுணுகி ஆராய்ந்து படிக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்.

அறிவுக்கு ஆசானின் அரிய விளக்கம்

“சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.’
(இதன் பொருள்: அலையும் ஐம்புல உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, நல்லவற்றை உள்ளும், தீயவற்றை வெளியிலும் தள்ளும் கருவியே அறிவாகும்.)
அறிவுடைமைக்கு, ஆசான் திருவள்ளுவர் தந்திருக்கும் இவ்விளக்கம் அறிஞர் உலகத்தை வியப்பில் ஆழ்த்துவதாகும்.
அறிவுடைமையின் பண்பு நலன்களையும், பயன்களையும் வகுத்தும், தொகுத்தும், பகுத்தும் அவர்
கூறியிருக்கும் முறை சிறப்பானது.
அறிவு அற்றம் காக்கும் கருவி (அழிவிலிருந்து காக்கும் கருவி), மெய்ப்பொருள் காண்பது அறிவு (நுட்பங்களை புரிந்து கொள்வது), கூம்பலும் இல்லது அறிவு (ஐயமற்ற தெளிவுடையது), என அறிவின் பண்புகளை வள்ளுவர் விரித்துரைக்கிறார்.

எந்த ஒரு பொருளையும் ஆய்வு செய்ய அதனுடைய இயற்பியல் பண்புகள், வேதியியல் பண்புகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் திருவள்ளுவர் அறிவுடைமை பற்றி மிக நுணுக்கமாக ஆய்வு செய்து கருத்துக்களை வரிசைப்பத்திக் கூறி இருக்கும் பாங்கு சிறப்பானது.
அவருடைய விளக்கத்தின் உச்சக்கட்டமாக இருப்பது “நன்றின்பால் உய்ப்பது அறிவு’. அதாவது அறிவு என்பது நல்லவற்றை மட்டுமே செய்யும்; நினைக்கும். அதுதான் அறிவு.

அவருடைய இந்த கருத்து ஆழமாக எண்ணத்தக்கது. ஒரு பெரிய விஞ்ஞானி தன்னுடைய அறிவாற்றலை இந்த சமூகத்திற்கு தீமை செய்ய பயன்படுத்துவானால் அவருக்கு இருப்பது அறிவுடைமை அல்ல என்று வள்ளுவர் கூறுகிறார். இதனை யாரால் மறுக்க முடியும்.

அதனால் தான் எத்துணை பெரிய படிப்பாளியாக இருந்தாலும் அவர் பயனற்றதீங்கான செயல்களை செய்தால் அவரைக்காட்டிலும் சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட அவரை அறிவில்லாதவர் என்று கூறக்கேட்கிறோம்.
நுண்பொருள் காண்பது அறிவு என்று உரைத்த வள்ளுவர் இதை நுணுக்கமாக உணர்ந்து நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறுவது அவரது சிந்தனைச் செழுமையை காட்டுகிறது.
அதுமட்டுமா? அறிவுக்கு முதன்மை கொடுத்த சிந்தனையாளர் அவர். அதன் மூலம் மனித மேன்மையை பறைசாற்றியவர். இதனால்தான் திருக்குறளை மனித குலமே புகழ்ந்து பேசுகிறது.

உலகம் போற்றும் உயரிய சிந்தனை

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற’
(பொருள்: மாசு இல்லாத; அதாவது குற்றமில்லாதஎவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காத மனநிலையே அறமாகும். மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரங்களே.)

உலகம் கண்ட மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான காலத்தை வென்று நிற்கும் திருக்குறளில் மானுடத்தை செழிக்கச் செய்யும் வாழ்வியல் சூத்திரங்கள் அடங்கியுள்ளன என்பதற்கு இந்த ஒரு குறட்பாவே பிறந்த சான்றாகும்.

உள்ளத்தில் இருக்கும் எண்ணம் தான் சொல்லாக வெளிவருகிறது. அந்த சொல் செயலாக உருப்பெறுகிறது. அப்படியானால் எல்லா செயல்களுக்கும் மனம்தான் அடிப்படை.

அந்தமனம் மாசு இல்லாமல் தூய்மையாக இருந்தால் மனிதன் தன்னைத் தானே மேன்மையடைச் செய்து கொள்வதுடன், சமூகத்திற்கும் அறம் செய்தவன் ஆகிறான். இந்த உயரிய குணத்தால்  உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் சண்டை சச்சரவின்றி இனிய நல்லுறவுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

ஆகவேதான் உள்ளத்தில் அழுக்கு, கெட்ட எண்ணங்களுக்கு இடம் தராமல் இருப்பது உயர்ந்த அறம் என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

இந்த ஞாலத்தில்  தோன்றிய எத்தனையோ சிந்தனையாளர்கள், எத்தனையோ அறக்கருத்துக்களை  தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் மிகச் சீரிய சிந்தனையாக இந்த உலகம் உள்ளவரை உயிர் பெற்றுத் திகழும் ஓர் உன்னத கருத்தை இந்த குறட்பாவிலே மிக அழகாக வள்ளுவர் சொல்லியிருப்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

அதனால்தான் அவரை இப்புவியில் தோன்றிய சீரிய சிந்தனையாளர்களில் ஒருவராக அறிஞர் உலகம் புகழ்ந்தேத்துகிறது. இந்த அடிப்படையில் தான் நாடு, மொழி, இனம் போன்ற எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தேவையான வாழ்வியல் நூலாக திருக்குறள் போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட சிறந்த கருத்துக்களின் கருவூலமாக திகழும் முப்பாலை நாம் சுவைத்து இன்புறுவோம்.