Archive for the 'பழமொழி' Category

கடையெழு வள்ளல்கள்

“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லை யளித்தாரைக் கேட்டறிதும் சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க் கணி’
என்ற பழமொழிப் பாடல் வள்ளல்களைப் பற்றி பேசுகிறது. தமிழகத்தில் கடையெழு வள்ளல்கள் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் யார் யார் என்று கேட்டால் எல்லோராலும் தடுமாற்றம் இன்றி சொல்லி விட முடியாது.
பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன் என்பவர்களே அந்த கடையெழு வள்ளல்கள் ஆவர். இவர்களில்  முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும், ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமானையும், மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனையும் நமக்குத் தெரியும். இதே போல மற்ற வள்ளல்களும் கொடையுள்ளத்தோடு வாழ்ந்து சிறப்புப் பெற்றவர்கள்தான்.
உயிரினங்கள் அனைத்துமே தங்கள் மேல் ஈர்ப்புக் கொண்டவை. அவை இன்பத்தை விரும்புகின்றன. அழிவை விலக்கி ஒதுக்குகின்றன. வாழ்வை  விரும்பி நீண்டகாலம் வாழ விழைகின்றன. பிறவிகள் அனைத்திற்கும் அதனதன் உயிர் மதிப்புமிக்கது. ஆகவே அனைத்து உயிரையும் காத்து போற்ற வேண்டும் என்பது பகவான் மகாவீரரின் போதனை.
 அந்தவகையில் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களையும் உயர்வாக போற்றிய பண்பாளர்கள் தான் இந்த கடையெழு வள்ளல்கள். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’  என்றார் வள்ளலார். எல்லா உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துவது வள்ளல் தன்மை.  அதனால்தான் ராமலிங்க அடிகளாரை வள்ளலார் என்று கூறுகிறோம்.
அந்த வழியில் கடையெழு வள்ளல்களும் கொடையுள்ளம் கொண்டு  உயிர்களை நேசித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்ததால் காலங்காலமாக போற்றப்படுகிறார்கள். அவர்களின் பூத உடல் மறைந்தாலும் புகழுடல் என்றும் மறையாமல் இருக்கிறது.