Archive for the 'சங்கப் பாடல்' Category

பிறர் நலம் நாடிய உயர்ந்த உள்ளம்

“வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆத னின்னகத் தடக்கி
சாத னீங்க வெமக்கீந் தனையே’
(புறம்: 91 பாடல்: ஒளவையார், வாழ்த்தியல் துறை)

 தமிழ் மூதாட்டி ஒளவையார் நீடு வாழ வேண்டி அவருக்கு, பழந்தமிழ் மன்னன் அதியமான் அரியவகை நெல்லிக்கனி ஒன்றை அளித்தான் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும். இதனை எடுத்துரைக்கும் பாடல் பலருக்குத் தெரிந்திருக்காது. அந்த இனிய புறநானூற்றுப் பாடலைத் தான் மேலே காண்கிறோம்.

விருந்தினராக வந்த தமிழ்ப் பெரும்புலவர் ஒளவை, நீண்ட நாள் வாழ்ந்து  தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், மிகுந்த முயற்சியால் கிடைத்த அருங்கனியை தான் உண்ணாது அவருக்கு வழங்கி மகிழ்ந்த அதியமானின் கொடை உள்ளத்தை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது.

விருந்தோம்பலில் தமிழர்கள் உயர்ந்து  விளங்கினர். அதற்கு எடுத்துக்காட்டாக அதியமான் விளங்கினான். அவனுடைய உயர்ந்த உள்ளத்தை  வாழ்த்தியல் துறையில் ஒளவையார் புகழ்ந்து பேசுகிறார்.

அன்பின் வழியது உயிர்நிலை, “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்ற உயர்ந்த கருத்துக்களுக்கு ஒப்ப பழந்தமிழ் மன்னர்களும், மக்களும் வாழ்ந்தார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமிதம் தரக்கூடிய செய்திகளாகும்.