Archive for the 'சிலப்பதிகாரம்' Category

கடல் கொண்ட பழந்தமிழகம்

“வாழ்க எம்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோறும் ஊழிதொறு உலகம் காக்க
அடியில்தன் அளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை  பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’

சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலின் உரைவடிவம் வருமாறு:
மன்னரில் பெருமை உடைய மன்னர் பெருந்தகை வாழ்க. காலம் காலமாக  அவன் இவ்வுலகைக் காத்து வளர்ப்பானாக. தெற்குக்கடல் அவன் திருவடி  பணியத் தன் திறமையை, வீரத்தைப் பகையரசர்கள் தெரியக் காட்டினான். இதனால்அவன் வெற்றி வேலின் முன்னே நிற்க பயந்து பகையரசர்கள் ஓடி ஒளிந்தனர்.

தென்திசையில் நெடுந்தூரம் பரவியிருந்த பஃறுளி ஆறும், பலமலைத் தொடர்களும், குமரிமலையும் கடல் கொண்டு போனதால், தெற்கே படையெடுக்க நிலம் இல்லாமல் போக, வடதிசை சென்று கங்கை ஆற்றையும், இமயமலையையும் வென்று அரசாண்ட தென்னவன் பாண்டியன் வாழ்க என்று இந்தப் பாடல் பேசுகிறது.

வரலாற்றை இலக்கியங்களின் துணைக் கொண்டுஆய்வு செய்வது ஒரு முறையாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை, புத்த சரித நூலாகிய இராசாவளி போன்ற பழந்தமிழ் நூல்களில் கடற்கோள்கள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
 

ஆய்வாளர்களின் கருத்துப்படி சுனாமி போன்ற பல கடற்கோள்கள் பழந்தமிழகத்தை விழுங்கி இருக்கின்றன. அப்படி கடலால் கொள்ளப்பட்ட தமிழ் நிலத்தை குமரிக் கண்டம் (லெமூரியா) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் தமிழ் நிலத்தின் தொன்மை தெரிய வருவதுடன் தமிழர்களின் ஆதித்தாயகம் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன.
அந்தவகையில் குமரிக்கண்டம் பற்றிய வரலாற்று ஆய்வு

முடிவுக்கு இந்தப் பாடல் அசைக்க முடியாத சான்றாக உள்ளது.
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள் என்று கூறுவது சாலப் பொருத்தமே என்பதையும் வரலாற்றின் பதிவுகள் என்பதையும் இந்தப் பாடலின் வழியாக உணரலாம்.