Archive for the 'சங்கப்பாடல்' Category

நாணத்தை பறித்து விடும் காதல்

 காதல் இன்பத்துக்கு இணையானது ஏதுமில்லை. நம் மீது அன்பு செலுத்தவும் நம் மீது அக்கறைப்படவும் நம்மை பாதுகாக்கவும் இன்னொரு உயிர் இருக்கிறது என்றால் அதை விட இன்பம் தருவது வேறேதாவது இருக்க முடியுமா என்ன? காதல் இன்பமானது மட்டுமல்ல சக்தி வாய்ந்ததும் கூட. காதலி, காதலனுக்கு கடைக்கண்ணை காட்டி விட்டால் அவனுக்கு மாமலையும் ஒரு கடுகாகத்தான் தோன்றும் என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியிருப்பதும் இதனால்தான்.

தமிழர்களின் பண்பாட்டில் காதலுக்கும், வீரத்துக்கும் முக்கிய இடம் உண்டு. அவையிரண்டும் நம் பண்பாட்டின் பிரிக்க முடியாத இரு முக்கிய கூறுகள். சங்க இலக்கியங்கள் காதலை புகழ்ந்து பேசுகின்றன. பாடல் நடை, சொல்லாடல்கள், பாடு பொருள், யாப்பு, ஓசை நயம், உவமைகள், கவிதை உருவாக்கம், கற்பனைக் காட்சிகள், வாக்கிய ஒழுங்குகள் என பல்வேறு வகையிலும் சங்கப் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என தமிழறிஞர்கள் பாராட்டி கூறுகின்றனர். அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அப் பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ்கின்றன.

இத்தனைக் காலமும் தமிழறிஞர்களின் வாயிலே வந்து நாவிலே நின்று அவை தமிழ் மணத்தை பரப்பிக் கொண்டிருக் கின்றன. காதலின் முன் எதுவும் குறுக்கே நிற்க முடியாது. பெற்றோரைக் கூட காதலர்கள் துச்சமாக தூக்கியெறிந்து விடுவதை கண்கூடாகக் காண்கிறோம். காதல் வயப்பட்ட ஒரு பெண் இருபது, முப்பது ஆண்டுகள் பெற்று வளர்த்து ஆளாக்கி பாதுகாத்த தாய், தந்தையரைக் கூட ஒரே நாளில் உதறி விட்டு நேற்று வந்த காதலனுடன் செல்வதை காண்கிறோமா இல்லையா? பெற்றோர் மீது அந்த பெண்ணுக்கோ, ஆணுக்கோ பாசமில்லை என்று கூறி விட முடியாது. அதனை விட காதல் சக்தி வாய்ந்தது; பாசத்தை விட காதல் பெரிது என்று தான் கருத வேண்டியுள்ளது. காதலைப் போலவே அதனை எடுத்துரைக்கும் எந்த ஒரு கலை வடிவமும் அது திரைப்படமானாலும் சரிதொலைக்காட்சி தொடரானாலும் சரிகதையானாலும் சரிகவிதை யானாலும் சரி சுவையானதுதான்.

காதலின் ஈர்ப்பு சக்தியே இதற்கு காரணம் என்று கூறலாம். அதிலும் சங்கப் பாடல்களில் காதலை எடுத்துரைப்பது தனிச் சிறப்பானது. நான்கைந்தே வரிகளில் செவ்விய முறையில் காதல் உணர்வை கூறும் பாங்கு, அப்பப்பா! எவ்வளவு சுவையானது? சங்க காலப் பெண் புலவர்களில் ஒளவையாருக்கு அடுத்ததாக அதிகமாக அறியப்பட்டவரான வெள்ளிவீதியார் எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே காண்போம். காமத்தையும் (காதல்) உயிரையும் இணைத்து கபிலர் “”உயிர்தவத் சிறிது காமமோ பெரிதே” என்று கூறியுள்ளார். ஆனால் வெள்ளிவீதியாரோ காமத்தையும், உயிரையும் ஒப்பிட்டு பாடியிருக்கிறார். காமம் வந்தால் பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம் எனப்படும் வெட்கமும் போய் விடும் என்று அவர் அப்பாடலில் கூறுகிறார்.
இனி பாடலை காண்போம் வாருங்கள்.

“””அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி னோங்கு மணல்
சிறுசிறை தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில்லாதே
” (குறுந் தொகை 149)

இதன் பொருள்: நாணமே, நெடுங்காலம் உன்னோடு இருந்து வருந்தியது போதும். இனிமேல் கரும்புக்கு நீர் பாய்ச்சுவதற்கு மண்ணால் இடப்பட்டிருந்த சிறு மணல் பாத்தியின் கரை நீர் நெருங்கி அடிக்கும் போது அக்கரை உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாங்கி காமம் (காதல்) மென்மேலும் நெருக்க என்னிடம் இருந்த நாணமும் போய் விட்டது என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம், காம மிகுதியால் உடைந்து போயிற்று; இல்லாது போயிற்று என காதல் பரிமாணத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
காதலை கவிநயத்துடன் எடுத்துரைக்கும் சங்கப் பாடல்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் இப்பாடலும் சுவையானது. அழகான ஒப்புமை இப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. காதலைப் போலவே அதன் சிறப்பையும் அதனால் மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும் உணர்வுகளையும் கூறும் இது போன்ற சங்கப் பாடல்கள் என்றென்றும் நமக்கு இலக்கிய இன்பம் தருவதாகும்.

துணை நலம் காக்கும் தூய காதல்

“”சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’


மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது
இந்தப் பாடலின் பொருள் வருமாறு: சுனையில் சிறிது அளவே நீர் உள்ளது. ஆண் மான் குடிக்கவில்லை என்றால் பெண் மான் குடிக்காது. ஆனால் அங்கு ஒரு மான் குடிப்பதற்கு ஏற்ற அளவிலேயே நீர் உள்ளது. எனவே ஆண் மான் சுனை நீரில் வாயை வைத்துக் குடிப்பது போல பாவனை செய்து பெண் மானைக் குடிக்க வைக்கிறது. இதுதான் காதலர் உள்ளத்தின் நெறியாகும். (பொருள். கலைஆண் மான்; பிணை பெண்மான்.)
சங்க காலப் பாடல்கள் அக்கால சூழ்நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டுவதுடன், மனித குலத்திற்கு தேவையான நல்ல செய்திகளையும் கொண்டுள்ளது. கணவன்மனைவி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும். ஒருவர் நலத்தை மற்றவர் எண்ண வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பு வேண்டும் என்ற நற்கருத்துக்களை இந்தப் பாடல் எடுத்துக் கூறுவது நம்முடைய உள்ளத்தை கவரக் கூடியதாகும்.
இவ்விதம் வாழக் கற்றுக் கொண்டால் மணமக்கள் வாழ்வு நலமாகவும், வளமாகவும் அமையும் என்று மான்கள் தங்கள் செயல் மூலம் தெரிவிப்பதாக புலவர் நயம்பட கூறுவது இலக்கிய இன்பத்தை அளிப்பதாகும்.

இயற்கைக் காட்சியின் இலக்கியப்பதிவு

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசையாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக’ (கபிலர்: அகம்:82)
எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள் என்றாலே எல்லோருக்கும் கொள்ளைப் பிரியம்தான். நேரில் பார்ப்பதாக இருந்தாலும் அல்லது அதனைப் பற்றி படித்து சுவைப்பதாக இருந்தாலும், பொதுவாக யாருக்கும் அலுப்பு தட்டாது.
சங்கப்பாடல்களை அக்கால வாழ்வியல் செய்திகளை பதிவு செய்து வைத்திருக்கும் இலக்கிய குறுந்தகடுகள் என்று கூட கூறலாம். மேற்க்காணும் பாடலும் மலையும், மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் இயற்கை காட்சியை மிக தத்ரூபமாக விவரித்து அதனை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
குறிஞ்சி நிலத்தின் மலைகளில் வளர்ந்த மூங்கில் அசைந்தாடுகிறது. அந்த மூங்கில் துளைகளிலே கோடையின் அனற்காற்று விரைந்து நுழைந்து செல்கிறது. அவ்வாறு காற்று நுழைந்து செல்லும் போது குழலிசையாகி அது ஒலிக்கிறது.
மலையிலிருந்து சீறிப் பாய்ந்து ஓடும் அருவியின் இனிய ஓசை பாடுவது போன்று விளங்குகிறது. மலையெங்கும் காணப்படும் பூக்களில் வண்டுகள் ஒலிப்பது யாழிசையாகத் தோன்றுகிறது என்று கபிலரின் இந்தப் பாடல் பேசுகிறது.
இயற்கைக் காட்சிகளுடன் புலவரின் கற்பனையும் நயம்பட சேர்ந்தால் அந்தப் பாடல் திகட்டாத இலக்கிய இன்பத்தை அளிக்கவல்லது என்பதற்கு இந்தப் பாடலே நல்ல சான்றாகும்.
சங்கத் தமிழர்கள் வாழ்க்கை இயற்கையோடு இயைந்து இருந்தது என்ற உண்மையும் இந்தப் பாடலின் மூலம் புலனாகிறது. குற்றாலம் போன்ற இயற்கை எழில் மிகுந்த ஊர்களுக்கு சென்றால் ஏற்படும் இனிய அனுபவத்தை இந்த ஒரே ஒரு பாடலின் வழியாகவே பெற முடிகிறது. சங்கப் புலவரின் பாடல்களில் இப்படிப்பட்ட இன்சுவைகள் ஏராளம் பொதிந்திருப்பதை அதனை படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும்.

அனைத்திலும் உயர்வான தூய அன்பு

“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர்அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும், நாடனொடு நட்பே.’
உண்மையான அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அன்புதான் உயர்வானது. அன்பில்லாதவர்கள் நடைபிணத்திற்கு ஒப்பானவர்கள். அன்பைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
சகோதரர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பதும் உண்மையான அன்புதான். பிறர் நலம் நாடக் கூடியது; அகந்தையில்லாதது; பணிவானது என்று அன்பின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம். அன்புடையவர்கள் பிறருக்காக் தங்களுடைய உயிரைக் கூட தியாகம் செய்வார்கள் என்பதை “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவரும் புகழ்ந்துரைக்கிறார்.
இந்த அடிப்படையில்தான் காதல், காலம் காலமாக போற்றப்பட்டு வருகிறது. அதுவெறும் இனக்கவர்ச்சியால் மட்டும் எழுவது அல்ல. தலைவனும், தலைவியும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் தூய்மையான அன்பை வெளிப்படுத்துவதால்தான் காதலை இந்த உலகம் புனிதமானது என்று போற்றுகிறது.
இந்த கருத்தை மேற்காணும் குறுந்தொகை பாடல் மிக அழகாகச் சொல்கிறது. பரந்த நிலத்தினும் அகலமானது; வானத்தை விடவும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் ஆழமுடையது என்னுடைய தலைவனின் நட்புகாதல் என்று தலைவி தன்னுடைய தலைவனின் உயர்வையும், சிறப்பையும் தோழியிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
தலைவனின் நட்பு உலகிலுள்ள அனைத்து பொருட்களையும் விட சிறந்தது என்ற உறுதியான கருத்துடைய தலைவியின் காதல் உணர்வு மற்றும் நம்பிக்கையின் மூலம் இரண்டு உள்ளங்களுக் கிடையே எழுந்து நிற்கும் தூய அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோல அக்கால வாழ்வியல் செய்திகள் பலவற்றை சுவைபட எடுத்துக் கூறும் சங்கத் தமிழ் பாடல்களை இலக்கியச் சுரங்கம் என்றும் கூறலாம்.

சங்ககாலப் பெண் புலவர்கள்

 சங்ககாலப் பாடல்கள் மூலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் அடிப்படை வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை ஓரளவுக்கு அறிந்து கொள்ளமுடிகிறது. தமிழர் வரலாற்றின் முக்கிய குறியீடுகளாகவும் அடையாளங்களாகவும் சான்றுகளாகவும் அவை திகழ்கின்றன. அப்பாடல்கள் இயற்கை நிகழ்வுகளையும் காட்சிகளையும் பின்புலமாக கொண்டிருப்பது அவற்றின் தனிச்சிறப்பாகும்.

அவற்றின் நடை, உத்தி, சொல்லாடல்களும் மிகச் சிறப்பானவை என்று தமிழறிஞர்கள் பாராட்டிக் கூறுகின்றனர். அவற்றை எழுதிய புலவர்கள் யாவர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதை துணிவுடன் அடித்துக் கூறலாம். சங்கப்பாடல்கள் அளவுக்கு கூட அவற்றை எழுதியவர்களின் பெயர்கள் பிரபலமடையவில்லை. அதிலும், சங்ககாலப் பெண் புலவர்கள் யார் என்றால் எல்லோரும் உதட்டையே பிதுக்குவார்கள். ஒளவையாரைத் தவிர வேறுயாருடைய பெயரும் நம்மில் பலருக்குத் தெரியாது.

எனவே, சங்ககாலப் பாடல்களை எழுதிய புலவர்கள் குறித்த தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம். நமக்கு கிடைத்துள்ள சங்கப்பாடல் களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றில் பல பெயர்கள் அவர்களது இயற்பெயர்கள் அல்ல. அத்துடன் சில புலவர்களின் பெயர்களையும் அறிய முடியவில்லை.

அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். இதிலும் பெண் புலவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. தமிழ் தாத்தா உ.வே.சா.கருத்துப்படி பெண்புலவர்களின் எண்ணிக்கை 38. ஒளவை துரைசாமிப்பிள்ளை 34 என்கிறார். இவ்வாறு இந்த எண்ணிக்கை 25லிருந்து 45 வரை நீள்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒளவை நடராஜன் சங்ககாலப் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 என வரையறுத்துள்ளார்.

இதோ அவர்களின் பெயர் பட்டியல்:

1. அஞ்சியத்தை மகள் நாகையார், 2. அஞ்சில் அஞ்சியார், 3. அள்ளூர் நன்முல்லையார், 4. ஆதிமந்தியார், 5. ஊண்பித்தை, 6. ஒக்கூர் மாசாத்தியார், 7. ஒளவையார், 8. கச்சிப்பேட்டு நன்னாகையார், 9. கழார்க்கீரன் எயிற்றியார், 10. காக்கைப்பாடினியார் / நச்செள்ளையார், 11. காமக்காணிப் பசலையார், 12. காவற்பெண்டு, 13. குமுழிஞாழலார் நப்பசலையார், 14. குறமகள் இளவெயினி, 15. குறமகள் குறியெயினி, 16. குன்றியனார், 17. தாயங்கண்ணியார், 18. நக்கண்ணையார், 19. நல்வெள்ளியார், 20. நன்னாகையார், 21. நெடும்பல்லியத்தை, 22. பாரி மகளிர், 23. பூங்கண் உத்திரையார், 24. பூதப்பாண்டியன் தேவியார், 25. பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார், 26. பேய்மகள் இளவெயினி, 27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார், 28. பொன்மணயார், 29. பொன்மணியார், 30. போந்தைப் பசலையார், 31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார், 32. மாரிப்பித்தியார், 33. மாறோக்கத்து நப்பசலையார், 34. முள்ளியூர்ப் பூதியார், 35. வருமுலையாரித்தி, 36. வெண்ணிக் குயத்தியார், 37. வெண்பூதியார், 38. வெண்மணிப் பூதியார், 39. வெள்ளிவீதியார், 40. வெறிபாடிய காமக்காணியார், 41. வெள்ளைமாளர்.

சங்க காலத்திலேயே இவ்வளவு பெண் புலவர்கள் இருந்துள்ளார்கள் என்பது நாம் அனைவரும் அறிய வேண்டிய செயதியாகும். இப்போது, பல பெண் புலவர்களை நாம் காண்கிறோம். இன்றைய முன்னேறிய சூழலில் இது பெரிய விஷயமல்ல; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் படைப்புகளை வழங்கியிருப்பதென்பது நம்மை பெருமிதம் கொள்ளச்செய்யும் செய்தி தானே!

காலத்தை வென்ற இலக்கியச் செல்வங்கள்

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற
இத்திறத்த எட்டுத் தொகை

 
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலைகடாந் தொடும் பத்து

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
 பால் கடுகங் கோவை பழமொழி, மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பனவும்
கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு

‘ உலகத்தின் மூத்த முதுமொழியாகிய தமிழின் தொன்மைக்கு சாட்சியங்களாக இருப்பவை இந்த சங்க நூல்களாகும். சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி தமிழ்மொழி. முதல் சங்கம், குமரி முனைக்குத் தெற்கே இருந்த ஆதித் தென்மதுரையில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அதில் அகத்தியர் முதலான புலவர்கள் இருந்தனர்.

சுமார் நான்காயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்ததாகக் கருதப்படும் 2வது தமிழ்ச்சங்கம் (இடைச்சங்கம்), தென் மதுரையை அடுத்து உருவான கபாடபுரத்திலே வெண்டேர் செழியன் என்னும் பாண்டிய மன்னனால் தொடங்கப்பட்டது. இவ்விரு சங்கங்களில் படைக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் கடல் கோளால் அழிந்தன.

3வது தமிழ்ச்சங்கம் (கடைச்சங்கம்), தற்போது மதுரை என்று அழைக்கப்படும் நான்மாடக் கூடல் திருநகரில் ஏற்பட்டது. சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்×ர் கிழார், நக்கீரர் முதலான 49 புலவர்கள் இருந்து தமிழ் வளர்க்கத் தொடங்கி, மொத்தம் 449 புலவர்கள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுனூறு, பதிற்றுப் பத்து, நற்றிணை நானூறு, நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, முதலான பல்லாயிரக்கணக்கான இலக்கியச் செல்வங்களை படைத்தனர்.

காலப் புயலாலும், இருமுறை ஏற்பட்ட கடல் குமுறலாலும் அழிந்தவை போக, இன்று நமக்கு எஞ்சிய நூல்கள் மிகச் சிலவேயாகும். இடைச்சங்கத்திலே எஞ்சிய ஒரே இலக்கணமான தொல்காப்பியம், கடைச்சங்கத்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென் கீழ்கணக்கு முதலானவையே நமக்கு இப்போது கிடைத்துள்ளது. அதனை எடுத்துரைக்கும் நூல்களின் பட்டியல் தான் மேற்சொன்ன பாடல்களாகும்.

வியக்க வைக்கும் பழம்பாடல்கள்

“செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்’

உலகம்  எப்படி தோன்றியது என்பதை சங்கப் பாடலின் இந்த இரண்டே வரிகள் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

14ம் நூற்றாண்டில் தான் வானவியல் விஞ்ஞானி கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதை ஆய்வு பூர்வமாக எடுத்துரைத்தார். நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.

அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின பரிணாம தோற்ற வரலாறு கூறுகிறது.  இந்த உண்மைகள்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இதன் மூலம் பன்னெடுங்காலத்துக்கு முன்பே ஆழமான அறிவியல் ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் உலகம் கருதுகிறது.

உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்ற ஐம்பூத தோற்ற வரலாற்றை

“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்

என்றாங்கு ஐம்பூதத்தியற்கை’ என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் விளக்குவது மிகுந்த வியப்பளிப்பதாக  உள்ளது.

இரண்டறக் கலக்கும் அன்பு மனங்கள்

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’

மிக அருமையான சங்கப் பாடல் களில் இதுவும் ஒன்று. தமிழர்களின்  மணவாழ்க்கை முறையை இது எடுத்துரைக்கிறது.
என் தாயும், உன் தாயும் யாரோ? என் தந்தையும், உன் தந்தையும் எந்த முறையில் உறவினரோ? நானும் நீயும் எவ்வாறு அறிவோமோ? செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அதனுடன் இரண்டக் கலந்து விடுவது போல நம் அன்பு நெஞ்சங்கள் முன்பின் உறவு இல்லாமலேயே கலந்தன என்பதே இந்த குறுந்தொகைப் பாடலின் பொருளாகும். சங்க காலத்தில் சாதி, சமயம் அற்ற சமுதாயம் இருந்ததை இப்பாடல் நயமுடன் தெரிவிக்கிறது.

 இதில் “செம்புலப் பெயல் நீர் போல’ என்ற உவமை மிகச் சிறப்பாக படிப்பவர்களை இன்புறச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பான உவமைகள் இடம் பெற்றிருப்பது சங்கப் பாடல்களின் தனித்துவமாக உள்ளன. கற்பனை, காட்சியமைப்பு, எளிமை, சொல்லாட்சி, சிந்தனைத் திறம் போன்றவற்றில் சங்காலப் புலவர்களின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

அத்துடன் அக்கால வாழ்வியல் சூழல்களையும் எடுத்துரைக்கும் வரலாற்றுச் சான்றுகளாக  சங்கப் பாடல்கள் திகழ்கின்றன.

எழுத்துத் துறையில் இருப்பவர்கள் சங்கப் பாடல்களை கற்றறிந்தால் அவர்களுடைய திறமை மேலும் சிறக்கும் என்பதற்கு இந்த அழகிய பாடலே சான்று பகரும்.

சாகாவரம் பெற்ற சத்தியவரிகள்

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா’
இந்தப் பாடல் வரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது.  இதை எழுதியவர் யார் என்பது வேண்டுமானால் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றனாரின் சாகாவரம் பெற்ற சத்திய வரிகள்தான் இவை.

உலகம் தழுவிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் எந்த ஒரு படைப்பும், எல்லா மனிதர்களாலும் வரவேற்று போற்றப்படும் என்பதற்கு இந்தப் பாடல் வரியை உதாரணமாக சொல்லலாம்.

மனிதர்கள் வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையோடு வாழ வேண்டும்  என்பதைத்தான் உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் கூறுகிறார்கள்.  இதற்கு நாடு போன்ற எல்லைகளும் இருக்கக்கூடாது என்ற சிந்தனையும் வலுத்து வருகிறது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா  ஊரும் நம்முடைய ஊரே; எல்லா மக்களும் நம்முடைய உறவினர்களே என்று கூறியிருப்பதன் மூலம் அந்தப் புலவனுக்கு எந்த அளவுக்கு தொலைநோக்குச் சிந்தனை இருந்திருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

 மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதப் பொதுமை காணும் உயர்ந்த லட்சியப் பார்வையை இந்தப் பாடல் வரி எடுத்துரைக்கிறது.  இந்தப் பார்வை உலக மனித வரலாற்றில் தனித்துவமான முத்திரை பதித்த சீரிய மனித நேய சிந்தனையாகும்.

உலகத்தையே நேசிக்கின்ற இந்த உயர்ந்த பண்பாட்டை  வள்ளுவரும் வலியுறுத்துகிறார். உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும் என்பதை  “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்ற குறளில் கூறுகிறார்.

வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற நாகரிக வளர்ச்சி இல்லாத மிகப்பழங்காலத்திலேயே உலக பொதுமைக்கும், முழுமைக்கும் புலவர்கள்  சிந்தித்து படைப்புகளை அளித்திருப்பது போற்றத் தகுந்ததாகும்.